சாலை விபத்தில் புகைப்படக் கலைஞர் பலி
By DIN | Published On : 21st April 2019 03:09 AM | Last Updated : 21st April 2019 03:09 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சனிக்கிழமை கார் விபத்துக்குள்ளானதில்
சிவகங்கையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், அம்மாபட்டினத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் முத்தையா (38). புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடன், புகைப்படக் கலைஞராக தேவகோட்டை அருகே உள்ள உருவாட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருப்பதி (29) வேலை பார்த்து வந்தார்.
இருவரும் சனிக்கிழமை சிவகங்கையிலிருந்து காரில் புறப்பட்டு சென்னைக்கு சென்றுகொண்டிருந்தனர். காரை முத்தையா ஓட்டிச் சென்றார். திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையோரமிருந்த புளிய மரத்தில் மோதி, கவிழ்ந்தது.
இந்த விபத்தில் திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்தையா பலத்த காயமடைந்தார். தகவலறிந்த ஒலக்கூர் போலீஸார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். காயமடைந்த முத்தையாவை தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து ஒலக்கூர் போலீஸார்
வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.