வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 21st April 2019 03:10 AM | Last Updated : 21st April 2019 03:10 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரியில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான இல.சுப்பிரமணியன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்குப் பதிவு முடிந்து, விழுப்புரம் உள்ளிட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து 1,723 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் தனித்தனியாக 6 அறைகளில் வைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை சீல்' வைக்கப்பட்டன.
இந்த அறைகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர் மூன்றடுக்கில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்களும், வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் சிசிடிவி கேமரா மூலம் இந்த அறைகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல்' வைக்கப்பட்ட அறைகளை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் இல.சுப்பிரமணியன் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விழுப்புரம் கோட்டாட்சியர் குமரவேல், கலால் உதவி ஆணையர் திருஞானம் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.