குடியிருப்புகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த டிஎஸ்பி அறிவுரை

விழுப்புரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களை அமைத்தல் போன்ற கண்காணிப்பை குடியிருப்பு சங்கத்தினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று, விழுப்புரம் டிஎஸ்பி திருமால் அறிவுறுத்தினார்.


விழுப்புரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களை அமைத்தல் போன்ற கண்காணிப்பை குடியிருப்பு சங்கத்தினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று, விழுப்புரம் டிஎஸ்பி திருமால் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் வழுதரெட்டி, ஸ்ரீராம் நகரில் காவல் துறை மற்றும் குடியிருப்பு நலச் சங்கம் சார்பில், குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. குடியிருப்பு நலச் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் கணகேசன், உதவி காவல் ஆய்வாளர்கள் பிரகாஷ், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் காவல்  துணைக் கண்காணிப்பாளர் திருமால் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:
இன்றைய சூழலில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, வழிப்பறி, ரௌடியிசம் என மாணவர்களே 50 சதவீத குற்றங்களில் ஈடுபடும் நிலை உள்ளது. பல விதமான குற்றங்கள் பெருகுவதால், போலீஸாரால் மட்டுமே தடுக்க முடியாத சூழல் நாடு முழுவதும் உள்ளது.
விழுப்புரம் நகரம் வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு, சைக்கிள் தொடங்கி லாரி வரை அனைத்தும் திருடுபோகின்றன. ஆள் இருக்கும் வீடுகளிலேயே திருட்டு நடக்கிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன்  இருக்க வேண்டும்.
வீடுகள், குடியிருப்புப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள், வீட்டுக் கதவுகளில் "அலாரம்' ஆகியவற்றை பொருத்தி கண்காணிக்க வேண்டும். இரவில் பைக்குகள், வாகனங்களை வீதிகளில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கதவுகளை இரட்டை பூட்டுக்களால் பூட்ட வேண்டும். விலை உயர்ந்த நகைகளை வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும்.
வீடுகள்தோறும் சிசிடிவி கேமராக்களை வைக்க முடியாவிட்டாலும், குடியிருப்பு சங்கத்தினர் இணைந்து குடியிருப்புகளின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்களை வைக்க வேண்டும். விழுப்புரம் நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, திண்டிவனத்தில் 350 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம்.
போலீஸாரோடு பொதுமக்களும்,  குடியிருப்புவாசிகளும் இணைந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், குடியிருப்பு நலச் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com