அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் 65 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில்,  மத்திய அரசு சார்பில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,  கோட்டக்குப்பம் பேரூராட்சி திடலில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வானூர் வட்டச் செயலர் 
ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  இடைக் குழுச் செயலர்கள் டி.ராமதாஸ்,  கே.குப்புசாமி, ஆர்.கண்ணப்பன், வி.கிருஷ்ணராஜ்,  ஆர்.தண்டபாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  
புதுச்சேரி பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம்,  விழுப்புரம் மாவட்டச் செயலர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு தொடர்பான போராட்டங்களுக்கு, மாவட்டத்தில் எங்குமே அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால்,  ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையிலான கோட்டக்குப்பம் போலீஸார்,  போராட்டத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.  
இதைத் தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்த அவர்களை அன்று மாலையில் விடுவித்தனர்.
முன்னதாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்ள மத்திய அரசைக் கண்டித்தும்,  போராட்டத்துக்கு தடை விதிக்கும் மாநில அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com