கோகுலாஷ்டமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோகுலாஷ்டமியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

கோகுலாஷ்டமியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
கிருஷ்ணர் அவதரித்த தினம் கோகுலாஷ்டமி விழாவாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி,  விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருமஞ்சனம் முடித்து கிருஷ்ணர், ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.
விழுப்புரம், வி.மருதூர் பஜனை கோயில் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமியையொட்டி, கிருஷ்ணருக்கு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, வேணுகோபால சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக கோயில் அருகே உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. 10 அடி உயரத்தில் கட்டப்பட்ட பானையை, இளைஞர்கள் போட்டி போட்டு நீண்ட குச்சியைக் கொண்டு உடைக்க முயன்றனர். இதை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.
இதேபோல, விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் ஸ்ரீ நவநீத கோபால கிருஷ்ணன் கோயிலில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோ பூஜை நடைபெற்றது. கன்றுடன் பசு கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து பெண்கள் பூஜை செய்தனர். மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் ஆனந்தவரதராஜ பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமியையொட்டி பெருமாளுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற உறியடி விழாவில் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு, பானை உடைத்தனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோயில்களில் கோகுலஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com