பொலிவிழந்து காணப்படும் விழுப்புரம் ரயில் நிலையம்! மேம்படுத்த நடவடிக்கை தேவை

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் விழுப்புரம் ரயில் நிலையம் பொலிவிழந்து காணப்படுவதால், இங்கு

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் விழுப்புரம் ரயில் நிலையம் பொலிவிழந்து காணப்படுவதால், இங்கு நுழைவு வாயில் அமைத்து அழகுற மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. இது, சென்னை - திருச்சி இடையேயான முக்கிய ரயில் நிலையமாக விளங்கி வருகிறது. தென் மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களும், கடலோர மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் சந்திக்கும் 
பகுதியாக திகழ்கிறது.
விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக புதுச்சேரி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலூர், செங்கல்பட்டு என 5 மார்க்கங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும், வட மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வியாபாரிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் விழுப்புரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால், வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்களும் ரயில் மூலம் செல்வதற்காக இதை நாடி வருகின்றனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் முதல்நிலை ரயில் நிலையமாக இருந்தும், இந்த ரயில் நிலையத்தை அழகுபடுத்தும் பணியும், வசதிகளை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது பயணிகளையும், பொதுமக்களையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
இங்குள்ள பிரதான நடைமேடையிலிருந்து ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மற்ற நடைமேடைகளுக்குச் செல்வதற்கு இரண்டு இடங்களில் மேம்பால நடைபாதைகள் இருக்கின்றன. ஆனால், அவை இரண்டுமே பயணச்சீட்டு வழங்குமிடத்தில் இருந்து தொலைவில் இருப்பதால், பயணிகள் எளிதாக மற்ற நடைமேடைகளுக்குச் செல்ல முடியவில்லை.
மேலும், மேம்பால நடைபாதையில் முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் ஏறுவதற்கு நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), மின் தூக்கிகள் (லிப்ட்) ஆகியவை இல்லாதது, அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது வரையில் நிறைவேற்றப்படவில்லை.
அதேபோல, கிழக்கு பாண்டி சாலையில் இருந்து ரயில் நிலைய வளாகத்துக்குள் நுழையும் பகுதி பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால், சாலை மார்க்கமாக ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், ரயில் நிலையத்தை அடைந்துவிட்டோமா என்பதை அறிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த ரயில் நிலையத்துக்கு வரும் வெளிநாட்டினருக்கும் இதே நிலைதான்.
குறிப்பாக, நுழைவு வாயில் பகுதியில் வாகனங்கள் ரயில் நிலையத்துக்குள் வரவும், வெளியே செல்லவும் தனித்தனிப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
அவை முறையாக கட்டமைப்பு செய்யப்படாததால், ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடவும், அழைத்துச் செல்லவும் வரும் வாகன ஓட்டிகள் வழியை அறிய முடியாமல் தடுமாற வேண்டியுள்ளது.
எனவே, விழுப்புரம் ரயில் நிலையத்தில் மற்ற முக்கிய ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளதைப்போல பல்வேறு வசதிகளை மேம்படுத்தவும், பொலிவுடன்கூடிய நுழைவு வாயில் அமைக்கவும், ரயில் நிலைய வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com