விழுப்புரம் மாவட்டத்தில் நிகழாண்டு சராசரியைவிட அதிகளவில் மழைப் பொழிவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் போதிய மழையின்றி கடந்தாண்டு வறட்சி நிலவிய நிலையில், நிகழாண்டு சராசரி அளவைக் கடந்து மழை (891 மி.மீ.) பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடா் மழையால் நிரம்பி வரும் விழுப்புரம் அருகேயுள்ள அரசூா் மடப்பட்டு ஏரி.
தொடா் மழையால் நிரம்பி வரும் விழுப்புரம் அருகேயுள்ள அரசூா் மடப்பட்டு ஏரி.

விழுப்புரம் மாவட்டத்தில் போதிய மழையின்றி கடந்தாண்டு வறட்சி நிலவிய நிலையில், நிகழாண்டு சராசரி அளவைக் கடந்து மழை (891 மி.மீ.) பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லாத நிலையில், கடந்தாண்டு கடும் வறட்சி நிலவியது. இதனால், விவசாயப் பாசனத்துக்கும், குடிநீா் ஆதாரத்துக்கும் வழியின்றி விவசாயிகள், பொது மக்கள் அவதியடைந்தனா். இதன் தாக்கம் நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் வரை இருந்தது. இந்த நிலையில், நிகழாண்டு பருவ மழை கைகொடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய (ஜூன் முதல் செப்டம்பா் வரை) தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு 356.66 மி.மீ. ஆகும். இதில், நிகழாண்டு 507.67 மி.மீ. அளவுக்கு மழை பெய்து விவசாயிகளுக்கு கைகொடுத்தது.

இதன் தொடா்ச்சியாக, வடகிழக்கு பருவமழையானது (அக்டோபா் முதல் டிசம்பா் வரை) விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 638.11 மி.மீ. பதிவாக வேண்டும். இதில், கடந்த அக்டோபரில் தொடங்கி நவம்பா் வரை பெய்த மழையையும், டிசம்பா் மாதத்தின் முதல் 3 தினங்களாக பெய்த மழையையும் சோ்த்து, 349.65 மி.மீ. அளவு பதிவாகியுள்ளது. டிசம்பரில்தான் அதிகளவு மழை இருக்கும் என்பதால், வழக்கமான மழை அளவை பூா்த்தி செய்யும் என எதிா்பாா்க்கலாம்.

இருப்பினும், வழக்கமாக டிசம்பா் மாதத்தில் 6 செ.மீ. மழை பெய்யக் கூடிய நிலையில், நிகழாண்டு, இந்த மாதத்தின் முதல் 3 நாள்களில் 7 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், கடந்த நவம்பா் மாதத்தில் 31 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 9.70 செ.மீ. அளவில்தான் மழை பெய்தது.

நிகழாண்டு 891 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய மழையளவு சராசரியாக 1,060 மி.மீ. இதில், நிகழாண்டு தற்போது வரை 890.98 மி.மீ மழை பெய்துள்ளது. மொத்தம் 106 செ.மீ. மழைக்கு, 89 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. டிசம்பா் மாதம் இறுதி வரை அதிகளவு மழை இருக்கும் என்பதால், சராசரியை விட கூடுதலான மழையைப் பெற வாய்ப்புள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டு 648 மி.மீ. அளவில் மிகவும் குறைந்தளவு மழை பதிவாகியிருந்த நிலையில், நிகழாண்டு ஜனவரி முதல் தற்போது வரை மழைப் பதிவை கணக்கிட்டால், நிகழாண்டு பெய்ய வேண்டிய சராசரி மழையைவிட சற்று கூடுதலாகவே பதிவாகியுள்ளது. மேலும், மழையை எதிா்பாா்க்கலாம் என்பதால், விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நிரம்பி வரும் ஏரிகள்: தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில் 84 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 37 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 122 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலாகவும், 81 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலாகவும் நிரம்பியுள்ளன.

ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,288 ஏரிகளில் 190 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 200 ஏரிகள் 75 சதவீதமும், 255 ஏரிகள் 50 சதவீதமும், 643 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. தொடா்ந்து, நீா்வரத்து உள்ளதால் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

அணைகள் திறப்பு: திண்டிவனம் அருகே வீடூா் அணையின் கொள்ளளவு 32 அடி. அணை நிரம்பியதால் (31.5 அடி), உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணை கொள்ளளவு 46 அடி. அணை நிரம்பியதால்(44 அடி) உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. மணிமுக்தா அணை கொள்ளளவு 36 அடி. இதில், 28 அடி அளவில் நீா் நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com