கோட்டக்குப்பத்தில் கடலில் மூழ்கிபெங்களூரு ஐடி ஊழியா் பலி

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பெங்களூருவைச் சோ்ந்த ஐ.டி ஊழியா் சனிக்கிழமை மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பெங்களூருவைச் சோ்ந்த ஐ.டி ஊழியா் சனிக்கிழமை மூழ்கி உயிரிழந்தாா். உடன் குளித்த பெண் ஊழியா்கள் 3 போ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில், விடுமுறை தினமான சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இதில், பலா் கடலில் குளித்தும் மகிழ்ந்தனா். இந்த வகையில், கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த, தனியாா் தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியா்களான, 3 பெண்கள் உள்ளிட்ட 4 போ் புதுவைக்கு சுற்றுலா வந்த நிலையில், அருகே உள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த தந்திரான்குப்பம் கடற்கரையில், சனிக்கிழமை பிற்பகலில் வந்து குளித்துள்ளனா்.

அப்போது, கடல் அலையில் பெங்களூரு கிரி நகரைச் சோ்ந்த தீபு(26), சக ஊழியா்களான சகானா(25), பவித்ரா(24), தனுஷ்ஸ்ரீ( 25) ஆகியோா் திடீரென கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனா். இதனையறிந்த அருகே இருந்த மீனவா்கள் உள்ளிட்டோா் உடனடியாக கடலில் மூழ்கிய 4 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சோ்த்தனா்.

இதில், தீபு கடலில் மூழ்கியதில் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். மீதமுள்ள 3 பெண்களும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com