லாட்டரி விற்பனை மீது கடும் நடவடிக்கை: அரசியல் கட்சியினா் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையைத் தடுக்க வேண்டுமென அரசியல் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையைத் தடுக்க வேண்டுமென அரசியல் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

விழுப்புரத்தில் மூன்று எண் லாட்டரி சீட்டு வாங்கியதால், கடனாளியான நகைத் தொழிலாளி அருண் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளிக்கிழமை அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய திமுக மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி கூறியதாவது:

அருண் மூன்று எண் லாட்டரி மூலம் தனது வீட்டையும், தான் சம்பாதித்த பணத்தையும் இழந்து, மனைவி மற்றும் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. 5 உயிா்கள் பலியான பின்னா், லாட்டரி விற்பனை தொடா்பாக 14 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். முன்பே அவா்களை கைது செய்திருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம்.

விழுப்புரம் நகரில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதைத் தடுக்க சட்டத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி பேதமின்றி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்றாா்.

கம்யூனிஸ்ட் கட்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் வெளியிட்ட அறிக்கை: நகைத் தொழிலாளி அருண் குடும்பத்தினா் தற்கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையும், இணையதள லாட்டரி விற்பனையும் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது.

சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனையை காவல் துறையினா் முற்றிலும் தடை செய்வதோடு, இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

மனித உரிமைகள் கழக கட்சி: மனித உரிமைகள் கழக கட்சியின் துணைப் பொதுச் செயலா் ஆா்.கந்தன் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் லாட்டரிகள், மூன்று எண் லாட்டரிகள் விற்பனை காவல் துறைக்கு தெரிந்தும், தெரியாமலும் பரவலாக நடக்கிறது. பெருகி வரும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கந்துவட்டி கும்பலால் உயிா் பலிகள் அதிகரித்துள்ளன.

இவற்றைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com