தமிழக மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலை விரும்புகின்றனர்

தமிழக மக்கள் சட்டப்பேரவை பொதுத் தேர்தலைத்தான் விரும்புகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 


தமிழக மக்கள் சட்டப்பேரவை பொதுத் தேர்தலைத்தான் விரும்புகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் க.கார்த்திகேயன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலில்  நேரங்களில் கட்சிகளிடையே கூட்டணிகள் உருவாகின்றன. கூட்டணி முறையாக ஏற்பட்டால் அது தவறல்ல. ஆனால், கட்டாயப்படுத்தி ஏற்படுத்துகிற கூட்டணி தமிழகத்தில் உருவாகப் போகிறது.
 குட்கா விவகாரம், ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 900 கோடி ஊழல் போன்றவை சிபிஐ விசாரணை வரை சென்றுள்ளன. வருமான வரித் துறையினர் சென்னை கோட்டை வரை சென்று சோதனை நடத்தி உள்ளனர். கொடநாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரங்கள் பெரிய பிரச்னைகளாக்கப்படும் எனக் கூறி, அச்சுறுத்தி கூட்டணி வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாங்கள் மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மத்தியில் புதிய ஆட்சி அமையவுள்ளது. அதுவும் திமுக சுட்டிக் காட்டக் கூடிய பிரதமர் தலைமையில்தான் மத்தியில் ஆட்சி அமையும். அப்போது, தமிழகத்தில் 21 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் வைத்தாக வேண்டும். ஒட்டு மொத்த தமிழக மக்கள் தற்போது விரும்புவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலைத்தான்.
திமுக சார்பில் தற்போது ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு தற்போதுதான் ஊராட்சிகள் நினைவுக்கு வருகின்றன. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஊராட்சி சபைக் கூட்டங்களை அவர் நடத்தவில்லை என தமிழக முதல்வர் தவறாக கூறி வருகிறார். 
நான் தமிழகத்தில் செல்லாத கிராமங்களே இல்லை. திமுகவில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் மாநகரப் பகுதிகளைவிட, நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளில்தான் அதிகமாகச் சென்று கட்சிக் கொடியேற்றி வைத்துள்ளேன் என்றார் மு.க.ஸ்டாலின்.
விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலர் க.பொன்முடி எம்எல்ஏ, திருவண்ணாமலை மாவட்டச் செயலர் எ.வ.வேலு 
எம்எல்ஏ, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர் செஞ்சிமஸ்தான் 
எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ, சேலம் வடக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலர் ஆ.அங்கையர்க்கண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரத்தில் வரவேற்பு:       கள்ளக்குறிச்சியிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் விழுப்புரம் புறவழிச் சாலை ஜானகிபுரம் பகுதிக்கு பிற்பகல் 1.30 மணியளவில்  வந்த மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதில், நகர செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலர் ஜெயச்சந்திரன், தளபதி நற்பணி மன்ற அமைப்பாளர் பொன்.கௌதமசிகாமணி, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், நகர பொறுப்பாளர் சர்க்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com