கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம்: பிப்.5, 6-இல் கருத்துக் கேட்பு

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பாக பொதுமக்களிடம்  தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிப்.5, 6-ஆம் தேதிகளில் கருத்துகளைக் கேட்க உள்ளார்.

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பாக பொதுமக்களிடம்  தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பிப்.5, 6-ஆம் தேதிகளில் கருத்துகளைக் கேட்க உள்ளார். விழுப்புரம்  மாவட்ட மக்கள் தங்களது கருத்துகளை அவரிடம் தெரிவிக்கலாம். 
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக முதல்வர் கடந்த ஜன. 8-ஆம் தேதி சட்டப் பேரவையில் பேசியபோது, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, புதிய மாவட்டத்தை தோற்றுவிப்பது தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறிய சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் விழுப்புரம் வருகை தருகிறார்.  அவர்,  செவ்வாய்க்கிழமை (பிப்.5) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளார்.
தொடர்ந்து, புதன்கிழமை (பிப். 6) காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை  கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது மக்களிடம் கருத்துகளை கேட்க உள்ளார்.
எனவே, இதுதொடர்பாக எழுத்து மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ கருத்து தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மேற்கண்ட தேதிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் ஆஜராகி, தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com