இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்: 106 பேர் கைது
By DIN | Published On : 29th January 2019 09:22 AM | Last Updated : 29th January 2019 09:22 AM | அ+அ அ- |

படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கோரி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், படித்த இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் அறிவழகன் தலைமையில் திரண்ட அந்தச் சங்கத்தினர் கோரிக்கைளை வலியுறுத்தி, ஊர்வலமாகச் சென்று சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீஸார், மறியிலில் ஈபட்ட 23 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோன்று, உளுந்தூபேட்டையில் சங்கத்தின் நகரச் செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 53 பேர், கள்ளக்குறிச்சியில் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.