ஆசிரியர் கல்வியியல் கல்லூரிக்கான புதிய கட்டடம் தயார்

விழுப்புரத்தில் புதிதாகத் தொடங்க உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரி கட்டடப் பணிகள் முடிந்து, கட்டடம் தயாராகி உள்ளது. அதற்கான உரிமம் வழங்குவதற்காக கோட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரத்தில் புதிதாகத் தொடங்க உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரி கட்டடப் பணிகள் முடிந்து, கட்டடம் தயாராகி உள்ளது. அதற்கான உரிமம் வழங்குவதற்காக கோட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரத்தில் தமிழக அரசால் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. 4 ஆண்டுகள் படிப்புகளை வழங்கும் ஒருங்கிணைந்த (பிஎஸ்சி - பி.எட்) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக புதிதாக தொடங்குவதற்காக, தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முயற்சியில், தமிழக அரசு சார்பில் அனுமதி பெற்று, இந்தக் கல்லூரி கொண்டுவரப்படுகிறது.
இதற்காக, விழுப்புரம் கே.கே. சாலையில் வி.மருதூர் பகுதியில் ரூ.4.83 கோடியில் புதிய கல்லூரிக் கட்டடம் கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வருகிறது. 2 ஏக்கர் அளவில் 2,307 ச.மீ. பரப்பளவில், இரண்டு தளங்களுடன் கல்லூரிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தின் வகுப்பறைகளில் நாற்காலிகள் அமைத்தல் உள்ளிட்ட உள் கட்டமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இங்கு, ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவிகள் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கல்லூரிக் கட்டடத்தை விழுப்புரம் கோட்டாட்சியர் த.குமாரவேல் சனிக்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர். கல்வியியல் கல்லூரி கட்டடப் பணிகள் முடிந்த நிலையில், அதற்குரிய உரிமம் வழங்குவதற்காக, வருவாய்த் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கல்லூரி கட்டடப் பணிகள் முடிந்த நிலையில், மத்திய அரசின் (என்சிடி) கல்விக் குழுமத்திலிருந்து உரிய அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனுமதி பெறப்பட்ட பின், அடுத்த கல்வியாண்டிலிருந்து இங்கு கல்வியியல் கல்லூரி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com