தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீர்: போக்குவரத்துக்கு வழியின்றி கிராம மக்கள் தவிப்பு

விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் தேங்கியதால், 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.


விழுப்புரம் அருகே கொத்தமங்கலம் ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் தேங்கியதால், 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் - காட்பாடி இடையே உள்ள ரயில்வே அகலப்பாதையில் விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்த ஆளில்லாத கடவுப்பாதையை மூடிவிட்டு, அந்தப் பகுதியில் ரயில்வே தரைப்பாலம் அமைத்தனர். ரயில்வே தரைப்பாலத்துக்கான கட்டமைப்புகள் முடிந்து, கடந்தாண்டிலிருந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
3 பாதைகளாகப் பிரியும் இந்த ரயில்வே தரைப்பாலத்தின் வழியாக கோனூர்,  கொத்தமங்கலம், தெளி, வெண்மணியாத்தூர், கப்பூர் ஆகிய கிராம மக்கள் சென்று வருகின்றனர். விழுப்புரம், காணை பகுதிகளில் இருந்து செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் மாற்றுச் சாலை இல்லாததால், இந்தப் பிரதான தரைப்பாலத்தின் வழியாகவே சென்று வர வேண்டும்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி, சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த தொடர் மழையால், இந்த தரைப்பாலத்தில் சுமார் 
3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால், சனிக்கிழமை காலை கோனூர், கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில்இருந்து விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்,  பொதுமக்கள், விவசாயிகள் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் தவிப்புக்குள்ளாகினர். மழை நீருக்குள் வாகனங்களை தள்ளிக்கொண்டு வந்து அவதிப்பட்டனர்.
இதனால், அந்த வழியாக சென்று வந்த அரசுப் பேருந்தும் வழியிலேயே நிறுத்தப்பட்டது. மழைக்காலம்தோறும் இந்த தரைப்பாலத்தில் கான்கிரீட் தரைத்தளம் போட்டுள்ளதால், மழை நீர் தேங்கிவிடுகிறது. இதனால், பொதுமக்கள் கிராமங்களிலிருந்து வெளியே செல்லவும், உள்ளே வருவதற்கும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, தரைப்பாலத்தில் தேங்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தரைப்பாலத்தின் கீழ் மழை நீர் வடிவதற்கு நிரந்தர தீர்வாக மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com