நிலத்தடி நீர்மட்டம்: குறைந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில்  விவசாயம், குடிநீர் விநியோகம் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விவசாயம், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், விவசாயம், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு பலன் தரும் வடகிழக்கு பருவமழையும், பகுதியளவு பலன் தரும் தென்மேற்கு பருவமழையும் கடந்தாண்டு போதிய அளவில் பெய்யவில்லை. இதனால் குடிநீர் பிரச்னையும், விவசாய பாசனமும் பாதிக்கப்பட்டன.
நிகழாண்டு வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழையின்மையால், வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால், வறட்சி பாதிப்பு குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விவசாயத்தையே சார்ந்துள்ளது. கரும்பு, நெல், வேர்க்கடலை, மரவள்ளி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின் றனர். இதற்கு கிணற்று நீர்ப்பாசனத்தையே நம்பியுள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கு மானாவரியாக மழையை நம்பி பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மையால், முப்போகத்தில் ஒரு போகத்தை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.
மழையை நம்பியுள்ள விவசாயிகளுக்கு, சாத்தனூர் அணை, வீடுர் அணை, மணிமுக்தா அணை, கோமுகி அணைகளும், அதன்மூலம் தென்பெண்ணை, சங்கராபரணி,  கோமுகி ஆறு, மணிமுக்தா ஆறு, மலட்டாறு உள்ளிட்டவைகள் மூலம் மழைக் காலங்களில் வரும் நீரோட்டத்தை வைத்து, நிலத்தடிநீர் மூலம் பாசனத்தைப் பெற்று வருகின்றனர். மழைக்காலத்தில் வரும் நீரை ஏரிகளில் சேகரித்து விவசாயிகள் ஒரு போக சாகுபடியை செய்து வருகின்றனர்.
பருவமழை குறைந்ததால் வறட்சி: விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1060 மி.மீட்டர் சராசரி மழையளவு பதிவாகி வந்தது. கடந்தாண்டு (2018-19) 758 மி.மீட்டர் அளவே மழை பதிவானது. சராசரிக்கே 302 மி.மீட்டர் மழையளவு குறைந்துள்ளது. இதனால், 28 சதவீதம் குறைவாகும்.
நிலத்தடி நீர் மட்டம் 10 மீட்டர் சரிவு: போதிய மழையின்மையால், ஆறுகள், ஏரிகள் வறண்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.  பொதுப் பணித் துறையினர் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது, வழக்கத்தைவிட நிலத்தடி நீர்மட்டம் 6.07 மீட்டர் அளவுக்கு குறைந்திருந்தது. 
இதைத் தொடர்ந்து,  கடந்த மார்ச் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வில்  9.17 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம் மேலும் கீழே இறங்கியுள்ளது தெரிய வந்தது.
இதன்மூலம், கடந்தாண்டைக் காட்டிலும் 2.51 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் நிகழாண்டு குறைந்துள்ளது.
இதனால்,  விவசாய ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஏப்ரல், மே மாதங்களில் பல இடங்களில் தண்ணீர் இரைப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம்,  ஏரிப் பாசனமின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மழையை நம்பி கரும்பு, நெல், வேர்க்கடலை, சவுக்கு, மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
விழுப்புரம் கோட்டத்தில் கடந்தாண்டுகளில் ஆறுகளை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் 50 அடி ஆழத்திலிருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 150 அடிக்கு சென்றுள்ளது. பிற இடங்களிலும்,  நகர்ப்புறங்களிலும் 200 அடி ஆழத்திலிருந்து தற்போது 300 அடி ஆழத்துக்கு சென்று விட்டது.
இதேபோல, வறட்சியால்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பல்வேறு கிராமங்கள், நகர்புறங்களிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதிகளில் குடிநீர் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது.
புதிய ஆழ்துளைக் கிணறுகள்: 
கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர்த் தேவைக்காக, போர்வெல் இயந்திரங்கள் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. கிராமப்புரங்களில் 150 அடி ஆழத்துக்கும், நகர்ப்புறங்களில் சுமார் 500 அடி ஆழத்துக்கும்
பொதுமக்கள் விருப்பப்படி ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுவதாக அந்தத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்தனர். இதற்காக, குறைந்த பட்சம்  ரூ.20 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
2017-18-ஆம் ஆண்டு அறிவித்தபடி விழுப்புரம் மாவட்டத்தை  வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். புதிய தடுப்பணைகள் அமைத்தும், ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை 
சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பை விட நிகழாண்டு மழை குறைவுதான். கோடையில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க, அரசு தரப்பில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com