கழிவுநீர் வாய்க்கால், சாலை வசதி இல்லாத குடியிருப்புப் பகுதி: பொதுமக்கள் தவிப்பு
By DIN | Published On : 18th June 2019 09:42 AM | Last Updated : 18th June 2019 09:42 AM | அ+அ அ- |

விழுப்புரம் கிழக்கு விஜிபி நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து, விழுப்புரம் சாலாமேடு விஜிபி நகர் கிழக்கு, ராதாகிருஷ்ணன் நகர் பகுதி குடியிருப்பு நலச் சங்கத்தினர், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ராதாகிருஷ்ணன் நகர், விஜிபி நகர் கிழக்குப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லை. அந்தந்த பகுதி காலி மனைகளில் கழிவு நீர், மழை நீர் தேங்கி நிற்கிறது.
தற்போது, காலியிடங்களில் வீடுகள் கட்டப்பட்டுவிட்டதால், கழிவு நீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால் சுகாதார சீர்கேடும், குடியிருப்புவாசிகளிடையே தகராறும் ஏற்பட்டு வருகிறது. தெருமின் விளக்குகளும் இல்லை. நகராட்சிக்கு உரிய வரிகளை செலுத்தியும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ஆதலால், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.