கலப்பட பால் விற்பனையை தடுக்க ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பட பால் விற்பனையை தடுக்கும் பொருட்டு, அரசு சார்பில் இலவச பால் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கலப்பட பால் விற்பனையை தடுக்கும் பொருட்டு, அரசு சார்பில் இலவச பால் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில், விழுப்புரம் பகுதிக்கான இலவச பால் கலப்பட பரிசோதனை முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முகாமை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பால் கலப்பட பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
 இன்றைய முகாமில் விழுப்புரம் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தினர் பசும்பால், எருமைப் பால் மாதிரியைக் கொண்டு வந்து, பரிசோதனை செய்தனர்.
 இதே போல பாலில் யூரியா, காஸ்டிக் சோடா, திரவசோப்பு சோடா, ஹைட்ரஜன் பெராக்சைடு, உப்பு போன்ற பொருள்களை கலப்படம் செய்யப்பட்டுள்ளனவா என இலவசமாக ஆய்வு செய்து கொடுக்கப்பட்டது.
 இந்த பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஜூன் 26) செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திலும், வியாழக்கிழமை திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திலும், வெள்ளிக்கிழமை திருக்கோவிலூர் ஒன்றிய அலுவலகத்திலும், சனிக்கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்திலும், திங்கள்கிழமை (ஜூலை 1) சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்திலும், செவ்வாய்க்கிழமை வானூர் ஒன்றிய அலுவலகத்திலும், புதன்கிழமை உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
 இந்த முகாம்களில் பங்கேற்று, மக்கள் தங்கள் பகுதியில் விற்கப்படும் பாலின் தரத்தை சோதித்து, தரமான பாலை வாங்கி பயன்பெற வேண்டும் என்றார். முகாமில், ஆவின் மேலாளர் வசந்தகுமார், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டார அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், இளங்கோவன், பத்மநாபன், அன்புமணி, பிரசாத், அருண்மொழி, மோகன், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 மளிகை கலப்பட சோதனைக்கு உத்தரவு
 பால் பரிசோதனை முகாமை பார்வையிட்ட ஆட்சியர், பாலின் தரத்தை அறியும் சாதனத்திலிருந்து வந்த பாலில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களின் நிலை குறித்த தகவலை கவனித்தார். இந்த விகிதாச்சார நிலை குறித்து, முகாமில் பங்கேற்ற அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டபோது, சரியான தகவல் தெரிவிக்க இயலாமல் விழித்தனர்.
 மேலும், மளிகைப் பொருளில் கலப்படம் குறித்த கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர், இது தொடர்பாக, அந்தந்த பகுதி கடைகளில் ஏன் ஆய்வு செய்வதில்லை என கேட்டபோதும், அலுவலர்கள் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தனர்.
 இதனால், அவர்களை கடிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர், பால் பரிசோதனை குறித்து, நன்கு தெரிந்துகொண்டு, பொது மக்களுக்கு பாலின் தரம் குறித்து விளக்க வேண்டும், அந்தந்த பகுதி மளிகை கடைகளில் சோதனை நடத்தி, கலப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரித்துச் சென்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com