நெகிழிகளை எரித்ததால் சுகாதாரச் சீர்கேடு: தனியார் நிறுவனம் முன் போராட்டம் 

விழுப்புரம் அருகே நெகிழிக் குப்பைகளை எரித்ததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதாகக் கூறி, தனியார் தொழிற்சாலை முன் இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம் அருகே நெகிழிக் குப்பைகளை எரித்ததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதாகக் கூறி, தனியார் தொழிற்சாலை முன் இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் போராட்டம் நடத்தினர்.
 விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் தொழிற்சாலைக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் சிமென்ட் மூலப்பொருளாக உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்புகள் முடிவடைந்து மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தினர் நெகிழிக் கழிவுகளை வெளியே கொட்டி தீ வைத்து எரித்ததாக அப்பகுதி இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை காலை திரண்டு வந்து, அந்த நிறுவனத்தின் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் கூறியதாவது: நெகிழிக் கழிவுகளை கொண்டு வந்து அரைக்கும் தொழிற்சாலை இங்கு வந்துள்ளது. இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர், நெகிழி கழிவுகளை தொழிற்சாலையின் வெளியே கொட்டி தீ வைத்து எரித்ததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்தத் தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என்றனர்.
 தகவல் அறிந்து வந்த காணை உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையிலான போலீஸார், போராட்டம் நடத்திய இளைஞர்களையும், தொழிற்சாலை உரிமையாளர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அப்போது, தொழிற்சாலைத் தரப்பில் கூறியதாவது: தொழிற்சாலைகளிலிருந்து வரும் துணிக் கழிவுகள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருள்களை இங்குள்ள சிறிய பிளான்ட்டில் அரைத்து, அதனை கூழாக்கி, சிமென்ட் தொழிற்சாலைக்கான மூலப்பொருளாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. இங்கு கழிவுப்பொருள் மேலாண்மைதான் நடைபெறவுள்ளது.
 இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமும் அனுமதி பெற்றுள்ளோம். இதில், எந்த விதத்திலும் நெகிழி கழிவுகளை எரிப்பதற்கு வேலையே இல்லை. திறந்த வெளியாகவே இந்த தொழிற்சாலை இயங்குவதால், இதில் சந்தேகத்துக்கும் இடமில்லை. இந்த தொழிற்சாலை கட்டுவதற்கு, இங்கிருந்த முள்புதர் செடிகள் போன்றவற்றை கடந்த இரு மாதங்களாக வெட்டி அகற்றி, எங்களது நிலத்தில் ஓரமாக கொட்டி வைத்திருந்தோம். அதற்கு அண்மையில் தீ வைத்து எரித்தோம். அதில் நெகிழி கூட கிடையாது. ஆகவே, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இடமில்லை. நிறுவனம் தொடங்கியதும், பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றனர். இதையடுத்து, போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸார் அறிவுறுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com