தொழில்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
By DIN | Published On : 04th March 2019 08:49 AM | Last Updated : 04th March 2019 08:49 AM | அ+அ அ- |

தமிழகத்தில் காலியாக உள்ள தொழில் கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில கௌரவத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி ராஜசேகர் வரவேற்றார்.
மாநிலப் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் ரங்கநாதன், மாநிலத் தலைமை நிலையச் செயலாளர் தாகப்பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர்கள் துரைராஜ், ஹரிஹரன், சேரமான், மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகி முத்துக்குமரன் நன்றி கூறினார். ஜாக்டோ-ஜியோ சார்பில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், விடுபட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதிய பணிக்காலத்தில் 50 சதவீத காலத்தை, ஓய்வூதியம் பெற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பிறகு அப்பணியிடங்களை மூடக்கூடாது, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.