மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: என்எல்சி அதிகாரி

மத்திய அரசு நிறுவனங்களில்  வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப பொறியியல் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநர் (சுரங்கம்)

மத்திய அரசு நிறுவனங்களில்  வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப பொறியியல் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநர் (சுரங்கம்)  ஹேமந்த்குமார் கூறினார். 
விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் 11-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேதியியல் துறைத் தலைவர் 
சி.பவுல்ராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆர்.செந்தில் தலைமை வகித்து, கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன துணைப் பொது மேலாளர் ஆர்.விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநர் (சுரங்கம்)  ஹேமந்த்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது: 
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பொறியாளர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இதனால் பொறியியல் மாணவர்கள் தங்களது  தகுதியை மேம்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்புக்கான சூழலைப் பெற வேண்டும்.  
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஊழியர்கள் பலர் ஓய்வுபெற உள்ளதால் 2022-ஆம் ஆண்டுக்குள் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். கேட் தேர்வு போன்றவை இல்லாமல் வேலைக்கான தேர்வு நேரடியாக நடைபெற உள்ளது. எனவே, மாணவர்கள்  மத்திய அரசு நிறுவனங்களில் வேலை பெறுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக,  போட்டி நிறைந்த இந்தச் சூழலில் கிராமப்புற மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
கல்வியுடன் கலை நிகழ்ச்சிகள்,  விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதால் மாணவர்கள் கூடுதல் திறமையுடன் செயல்பட முடியும் என்றார் அவர். 
 விழாவில், தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.  வேதியியல் துறை பேராசிரியர் வி.செல்வராஜ், மின்னணுவியல் துறை பேராசிரியர் எம்.பெமினா செல்வி உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 
மெக்கானிக்கல் துறைத் தலைவர் வி.ஞானமூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com