பெண் எரித்துக் கொலை: இரு இளைஞர்கள் கைது

ஆரோவில் அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆரோவில் அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பொம்மையார்பாளையத்தை அடுத்த முத்திரித் தோப்பு ஓடைப் பகுதியில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம் மேற்பார்வையில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துர்கா, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன், மரக்காணம் காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைகள் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கடந்த 29ஆம் தேதி முதல் காணாமல் போன மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த  அன்பழகனின் மகள் லட்சுமி(20) என்பது தெரியவந்தது. இதனை லட்சுமியின் உறவினர்களும் உடலை அடையாளம் காட்டி உறுதி செய்தனர். 
இதையடுத்து, புதுச்சேரியில் லட்சுமி பணியாற்றிய பாத்திரக்கடையில் உடன் பணிபுரிந்த கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த பாட்ஷா மகன் அப்துல் ரஹ்மான்(20), அந்த கடையின் சரக்கு வாகன ஓட்டுநர் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அருண்(25) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தெரியவந்ததாவது: அருணுக்கும் லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாம். 
இதன் விளைவாக, லட்சுமி கர்ப்பமானாராம். இது குறித்து அருணிடம் லட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால், லட்சுமியின் மீது அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, லட்சுமியை காதலிப்பதாக அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். ஆனால், இவரது காதலை லட்சுமி ஏற்றுக்கொள்ளவில்லையாம். இதனால், லட்சுமி மீது அப்துல் ரஹ்மான் ஆத்திரமாக இருந்தாராம். ஆகவே, அருணும், அப்துல் ரஹ்மானும் இணைந்து லட்சுமியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, கடந்த 29-ஆம் தேதி இரவு கடையில் பணி முடிந்து புறப்பட்ட லட்சுமியை அருணும், அப்துல் ரஹ்மானும் சேர்ந்து சரக்கு வாகனத்தில் பொம்மையார்பாளையம் முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொன்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தெரியவந்தது.
இது தொடர்பாக, ஆரோவில் போலீஸார் முதலில் பதிவு செய்த சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து அருண், அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இந்த வழக்கில் விரைவாக துப்பு துலக்கி எதிரிகளை கைது செய்த தனிப்படையினர், தனிப்பிரிவு போலீஸார் முத்து, சங்கர், பிரதாப் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com