விழுப்புரத்தில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் மின் விளக்குகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம் நகரினுள் அமைந்துள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் மின் விளக்குகள் இரவு நேரங்களிலி நிறுத்தி வைக்கப்படுவதாலும், பழுதாகி இருப்பதாலும் சாலையில் நடந்து


விழுப்புரம் நகரினுள் அமைந்துள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் மின் விளக்குகள் இரவு நேரங்களிலி நிறுத்தி வைக்கப்படுவதாலும், பழுதாகி இருப்பதாலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
விழுப்புரம் நகராட்சி சார்பில், பொதுமக்களின் வசதிக்காக சிறு தெருக்கள், சாலைகள், பிரதான சாலைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடவும், வாகன ஓட்டிகள் பள்ளம், மேடுகளை எளிதாக கவனித்து இயக்கவும் உதவியாக இருந்து வருகின்றன. 
இந்த நிலையில், விழுப்புரம் நகரில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்லும் பிரதான சாலைகளான திருச்சி - சென்னை சாலை, நேருஜி சாலை, மாம்பழப்பட்டு சாலை ஆகியவற்றில் உள்ள மின் விளக்குகள் சரியான வகையில் எரிவதில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள திருச்சி - சென்னை சாலையில் உள்ள குறைந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்தும் எல்.இ.டி. மின் விளக்குகள் அனைத்தையும் இரவு நேரங்களில் தொடர்ந்து எரியவிடாமல், ஒரு விளக்குவிட்டு ஒரு விளக்கு என்ற வகையில் எரிய விடுகின்றனர். மேலும், சில இடங்களில் விளக்குகள் பழுதாகி உள்ளன.
இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. 
மேலும், வழிப்பறி சம்பவங்கள் நடக்க இது ஒரு காரணியாக அமைகிறது. இதேபோல, புதிய பேருந்து நிலையப் பகுதியில் மின் விளக்குகள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுவது வாடிக்கையாக மாறியுள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து விழுப்புரத்துக்கு வரும் பயணிகள், பெண்கள், முதியவர்கள் அவதியடைகின்றனர். 
மேலும், சிக்னல் அருகேயுள்ள இரண்டு பேருந்து நிறுத்த நிழல்கூரைகளிலும் மின் விளக்குகள் எரிவதில்லை. இந்த இரண்டு இடங்களும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.
இதேபோல, பல்வேறு சாலைகளிலும் மின் விளக்குகள் பழுதாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை
இதுகுறித்து விழுப்புரம் நகராட்சி ஆணையர் லட்சுமி கூறியதாவது: விழுப்புரம் நகரின் சாலைகளில் தேவையான அளவில் மின் விளக்குகள் உள்ளன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எல்.இ.டி. விளக்குகள் தானியங்கி முறையில் இயங்கக் கூடியவை. இவற்றில் தேவையான இடங்களில் விளக்குகள் எரிவது உறுதி செய்யப்படுகிறது.
எங்காவது விளக்குகள் எரியாமல் இருந்தால், உடனடியாக கண்காணித்து விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகராட்சி சார்பிலும் எங்கெங்கு விளக்குகள் எரியவில்லை என்பதை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் சாலை விளக்கு, தெரு விளக்கு எரியவில்லை என்று புகார் தெரிவித்தால், உடனடியாக சீரமைக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com