டேங்கர் லாரி மீது கார் மோதல்: பெண் உள்பட இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் புறவழிச் சாலையில் புதன்கிழமை குடிநீர் டேங்கர் லாரி மீது கார் மோதியதில், கேரளத்தைச் சேர்ந்த பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் புறவழிச் சாலையில் புதன்கிழமை குடிநீர் டேங்கர் லாரி மீது கார் மோதியதில், கேரளத்தைச் சேர்ந்த பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
 கேரள மாநிலம், கோட்டயம் முள்ளான்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் மகன் ஜெரின்ஜோஸ். ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். இவரது மனைவி லித்மெத் (26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், அந்த வேலையை கைவிட்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது கணவருடன் செல்ல முடிவு செய்தார்.
 இதற்காக லித்மெத் தனது உறவினர்களான ஜோஸ் (60), ஜெபஸ்டின்(50) ஆகியோருடன் முள்ளான்கொல்லி பகுதியிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு சொகுசு காரில் புறப்பட்டு வந்தார்.
 அந்த காரை, கேரள மாநிலம், சங்கனாச்சேரி மம்மூத் மம்பராம்பில் பகுதியைச் சேர்ந்த வில்சன்(43) ஓட்டி வந்தார்.
 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தைக் கடந்து புறவழிச் சாலையில் வந்த அந்த கார், எதிரே நான்கு வழிச்சாலை மையப் பகுதியில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த குடிநீர் டேங்கர் லாரி மீது அதிவேகத்தில் மோதியது.
 இந்த விபத்தில், கார் பலத்த சேதமடைந்தது. காரின் இடிபாடுக்குள் சிக்கிய ஓட்டுநர் வில்சன் நிகழ்விடத்திலேயே பலியானார். கார் மோதிய வேகத்தில் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட லித்மெத், ஜோஸ், ஜெபஸ்டின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
 அவர்கள் மூவரையும் விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீஸார் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லித்மெத் உயிரிழந்தார்.
 லாரிக்கு அடியில் சிக்கிய கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. அதிலிருந்து வில்சன் உடலை போலீஸார்
 கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 அலட்சியத்தால் நிகழ்ந்த கோர விபத்து: விழுப்புரம் புறவழிச் சாலையின் மையப் பகுதியில் உள்ள செடிகளுக்கு நான்கு வழிச்சாலை பராமரிக்கும் சுங்கச்சாவடி தனியார் நிறுவனத்தினர், டேங்கர் லாரி மூலம் குழாய் மூலம் தண்ணீர் ஊற்றினர்.
 டேங்கர் லாரியை சாலையில் நிறுத்தி பணி செய்வதற்கான எந்த ஒரு தடுப்பும், பாதுகாப்பு சமிக்ஞைகளும் இல்லாமல், இவர்கள் செடிகளுக்கு தண்ணீர் விட்டபடி மெதுவாக நகர்ந்து சென்றுள்ளனர்.
 விரைவுச் சாலையில், அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர், முன்னால் நின்றிருந்த அந்த டேங்கர் லாரியை கவனிப்பதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
 இந்த விபத்தால், சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலையில், சென்னை வழித்தடத்தில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
 விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com