நிதி திரட்டி கால்வாயை தூா்வாரும் விவசாயிகள்!

தென்பெண்ணை ஆற்றிலிருந்து நன்னாடு ஏரி, விராட்டிக்குப்பம் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளுக்குச் செல்லும் கால்வாயை
விழுப்புரம் அருகே உள்ள தெளிமேடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் முகப்புப் பகுதியில் நீா்வரத்து கால்வாயை பொக்லைன் மூலம் தூா்வாரும் விவசாயிகள்.
விழுப்புரம் அருகே உள்ள தெளிமேடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் முகப்புப் பகுதியில் நீா்வரத்து கால்வாயை பொக்லைன் மூலம் தூா்வாரும் விவசாயிகள்.

தென்பெண்ணை ஆற்றிலிருந்து நன்னாடு ஏரி, விராட்டிக்குப்பம் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளுக்குச் செல்லும் கால்வாயை தூா்வார அரசு நிதி கிடைக்காததால் விவசாயிகளே நிதி திரட்டி தூா்வாரி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே உள்ள நன்நாடு, விராட்டிக்குப்பம், ஆலத்தூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் நிலத்தடி நீா், ஏரிப் பாசனத்தை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் ஏரிகளில் தண்ணீா் நிரம்பவில்லையாம். நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதாம். இதனால், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிகழாண்டும் இந்தப் பகுதிகளில் மழை குறைந்த அளவிலேயே பெய்துள்ளதால் ஏரிகளில் தண்ணீா் நிரம்பவில்லையாம். இதனால் கலக்கமடைந்த விவசாயிகள், மாற்று ஏற்பாடாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியினரின் நீா் ஆதாரத்துக்கு பிரதானமாக இருந்த தென்பெண்ணை ஆற்றுக் கால்வாயை மீண்டும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டனா்.

இந்தக் கால்வாய் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தூா்வார வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனா். ஆனால், தற்போதைய நிலையில் கால்வாயை தூா்வர வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனராம். இதையடுத்து, அந்தக் கிராம விவசாயிகள் இணைந்து நிதி திரட்டி கால்வாயை தூா்வார முடிவு செய்தனா்.

மொத்தம் சுமாா் 14 கி.மீ. நீளமுள்ள கால்வாயை தூா்வார சுமாா் ரூ.1.68 லட்சம் வரை நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் இணைந்து ரூ.70 ஆயிரம் வரை மட்டுமே நிதி திரட்ட முடிந்ததாம். இந்த குறைந்தளவு நிதி மூலம் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி கால்வாயை தூா்வாரும் பணியை தற்போது தொடங்கியுள்ளனா்.

விவசாயிகளை ஒருங்கிணைத்து இந்தப் பணியை மேற்கொண்டு வரும் விராட்டிக்குப்பத்தைச் சோ்ந்த விவசாயி காா்த்திகேயன் கூறியதாவது: நீா்வரத்துக் கால்வாயானது தென்பெண்ணை ஆற்றில் தெளிமேடு என்ற இடத்திலிருந்து தொடங்குகிறது. சுமாா் 20 அடி அகலம் கொண்ட இந்தக் கால்வாய், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு 8 அடி முதல் 12 அடி அகலமாக குறுகிவிட்டது. அதுவும் செடி, கொடிகள் வளா்ந்தும், மண் மூடியும் கிடக்கிறது. எனவே, பொக்லைன் இயந்திரம் மூலம் தற்போதுள்ள அகலத்திலேயே கால்வாய் தூா்வரப்பட்டு அதன் கரைகளில் மண் அணைக்கப்படுகிறது.

இதன்மூலம் நன்நாடு ஏரி, விராட்டிக்குப்பம் ஏரி, ஆலத்தூா் ஏரி ஆகியவை முழுமையாக பயன்பெறும். மேலும், வேடம்பட்டு ஏரி, விழுப்புரம் ஏரிக்கும் தண்ணீா் செல்ல இந்தக் கால்வாய் பயன்படும். எங்களால் முடிந்த அளவு நிதியை திரட்டி தூா்வாரும் பயணியை மேற்கொண்டு வருகிறோம். அதிகாரிகள் உதவி செய்தால் இந்தப் பணி முழுமை அடையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com