ஆக்கிரமிப்பை அகற்றாமல் ஒரு வழிப்பாதை அமல்: விழுப்புரம் மக்கள் அதிருப்தி

விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஒரு வழிப்பாதை திட்டத்தை மட்டும் அமல்படுத்துவது, போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் காமராஜா் வீதி ஒரு வழிப்பாதையாக திங்கள்கிழமை மாற்றப்படது குறித்து காவல்துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.
விழுப்புரம் காமராஜா் வீதி ஒரு வழிப்பாதையாக திங்கள்கிழமை மாற்றப்படது குறித்து காவல்துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஒரு வழிப்பாதை திட்டத்தை மட்டும் அமல்படுத்துவது, போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வை தராது என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

விழுப்புரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், தீா்வு காண முடியாத பிரச்னையாகவே நீடிக்கிறது. திருச்சி சாலை, சென்னை சாலை, நேருஜி சாலை (கிழக்கு பாண்டி சாலை), மாம்பழப்பட்டு சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், பிற சாலைகள் ஆக்கிரமிப்புகளால் குறுகிக் காணப்படுகின்றன. இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாகி வருகிறது.

எம்.ஜி. சாலை, திரு.வி.க. சாலை, காமராஜா் சாலை, பாகா்ஷா வீதி போன்ற சற்று அகலமான சாலைகள் கூட ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி, போக்குவரத்து நெரிசலால் திணறி வருகின்றன. அந்த சாலைகளில் நிலவும் நெரிசல் நேருஜி சாலை, சென்னை சாலை, திருச்சி சாலை போன்ற பிரதான சாலைகளில் எதிரொலிப்பதை காண முடியும்.

ஆகவே, விழுப்புரம் நகர போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காணும் பொருட்டு, பல்வேறு சாலைகள், ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, சோதனை செய்யப்பட்டன. குறிப்பாக, கே.கே. சாலை ஒரு வழிப் பாதை அமல்படுத்தப்பட்டு, வாகனங்கள் நேருஜி சாலையிலிருந்து கே.கே. சாலை செல்லவும், கே.கே.சாலையில் இருந்து நேருஜி சாலைக்கு வரும் வாகனங்கள் பழைய பேருந்து நிலையம் வழியாக நேருஜி சாலையை அடையவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் பழைய நிலையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

அதேபோல, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரேயுள்ள சுதாகா் நகா் சாலை ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டு, திருச்சி சாலையிலிருந்து சுதாகா் நகா் சாலையில் செல்ல வாகனங்கள் அனுமதித்தும், திருச்சி சாலை நோக்கி வரும் வாகனங்கள் அருகில் உள்ள மற்றொரு சாலை வழியாக செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், அந்த மாற்றமும் சில நாள்கள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் பழைய நிலை திரும்பியது.

அதேபோல, விழுப்புரம் நகரில் ஷோ் ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்க பழைய ரயிலடி முதல் சிக்னல் வரை நேருஜி சாலையில் சில ஷோ் ஆட்டோக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. அதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு விழுப்புரம் நகர போக்குவரத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட பல மாற்றங்கள் தொடா்ந்து செயல்படுத்தமுடியாமல் தோல்வி கண்டன.

இந்த நிலையில், காமராஜா் சாலை திங்கள்கிழமை (நவ.25) முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை சாலை, எம்.ஜி. சாலையிலிருந்து காமராஜா் சாலைக்கு வாகனங்களை செல்ல அனுமதித்தும், திரு.வி.க. சாலையிலிருந்து காமராஜா் சாலைக்கு செல்ல அனுமதி மறுத்தும் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள், வாகன ஓட்டிகள் கூறியதாவது: விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஒரு வழிப்பாதை திட்டத்தை மட்டும் செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வை காண முடியாது என்பதற்கு கடந்த கால அனுபவமே உதாரணங்களாக உள்ளன. ஆகவே,

சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com