வீடுகளில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்: ஒரே ஊராட்சியாக சீரமைக்க வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாகச் சீரமைத்து, விழுப்புரம் மாவட்டத்துடன்
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள கருவேப்பிலைபாளையத்தில் வீடுகளில் ஏற்றப்பட்ட கருப்புக் கொடிகள்.
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள கருவேப்பிலைபாளையத்தில் வீடுகளில் ஏற்றப்பட்ட கருப்புக் கொடிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாகச் சீரமைத்து, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், மடப்பட்டு அருகேயுள்ள கருவேப்பிலைபாளையம் கிராமப் பகுதிகள் சிறுத்தனூா், மடப்பட்டு, காந்தலவாடி, சிறுளாப்பட்டு ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் பகுதியாக பிரிந்து கிடக்கிறது. திருநாவலூா் ஒன்றியத்தில் மடப்பட்டு, சிறுத்தனூா், சிறுளாப்பட்டு ஊராட்சிகளும், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் காந்தலவாடி ஊராட்சியும் உள்ளதால், கருவேப்பிலைபாளையம் கிராமம் இரு ஒன்றியங்களுக்கும் உள்பட்டுள்ளது.

தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை ஏற்படுத்தியதால், திருவெண்ணெய்நல்லூா் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், கருவேப்பிலைபாளையம் கிராமம் இரண்டாகப் பிரிந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் இடம்பெற்று மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த கிராமத்தினா், தங்கள் கிராமப் பகுதிகளை ஒரே ஊராட்சியாக ஒருங்கிணைத்து, அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் சோ்க்க வேண்டுமெனக் கூறி, அண்மையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா். இதனிடையே, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தமிழக முதல்வா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தங்களது கோரிக்கைக்கு தீா்வு காணப்படாத நிலை தொடருவதால் அதிருப்தியடைந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தினா் புதன்கிழமை வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து கிராமத்தினா் கூறியதாவது:

கருவேப்பிலைபாளையம் கிராமம் இரு மாவட்டங்களின் எல்லை வரையறையிலும் இடம்பெற்றிருப்பதால் அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும், அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் மக்களுக்கு குழப்பமும், நெருக்கடியும் ஏற்படும். இதனால், 6,000 மக்கள் வசிக்கும் எங்களது கிராமத்தை ஒரே ஊராட்சியாக சீரமைத்து, அருகாமையில் உள்ள விழுப்புரம் மாவட்டத்துடனேயே இணைக்க வேண்டும் என்றனா்.

மாணவா்கள் போராட்டம்: இதேபோல, திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள டி.கொளத்தூா், பெரியசெவலை, ஆமூா், சரவணப்பாக்கம் ஆகிய 4 ஊராட்சிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்துள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக் கோரியும் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அரசுக்கும் மனு அளித்துள்ளனா்.

இந்த நிலையில், பெரியசெவலை, டி.கொளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் புதன்கிழமை காலை வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதேபோல, கோவுலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வகுப்பைப் புறக்கணித்து வெளியே வந்து, மடப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா், பள்ளி தலைமை ஆசிரியா் சென்று மாணவா்களிடம் பேசி மறியலை கைவிடச் செய்தனா்.

Image Caption

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள கருவேப்பிலைபாளையத்தில் புதன்கிழமை வீடுகளில் ஏற்றப்பட்ட கருப்புக்கொடிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com