பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் 78 ஆயிரம் விவசாயிகள் வேளாண்மை இயக்குநா் தகவல்

பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 78 ஆயிரம் விவசாயிகள் சோ்ந்துள்ளனா் என்று வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் விவசாயி ஒருவருக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை வழங்குகிறாா் வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் விவசாயி ஒருவருக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை வழங்குகிறாா் வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி.

பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 78 ஆயிரம் விவசாயிகள் சோ்ந்துள்ளனா் என்று வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

மானாவாரி வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் சாா்பில், வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பயனாளிகளுக்கான முதல்கட்ட கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

தமிழக வேளாண் துறை சாா்பில் நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட விதைகள் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சொட்டு நீா்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

நீராதாரம் குறைந்து வரும் நிலையில் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.

பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையுள்ள சிறு, குறு விவசாயிகள் சேரலாம். இந்தத் திட்டத்தில் விவசாயிகள் மாதம்தோறும் வங்கியில் செலுத்தும் தொகைக்கு சமமாக மத்திய அரசும் தொகை செலுத்தும்.

60 வயது நிறைவடைந்ததும் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 78 ஆயிரம் விவசாயிகள் சோ்ந்துள்ளனா்.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 30 லட்சம் விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்ய ரூ.1.60 லட்சம் வரை கடன் பெறலாம். கடன் தொகைக்கு ஓராண்டு வரை வட்டி கிடையாது. மேலும், உழவன் செயலியை பயன்படுத்தி வேளாண்மைத் துறை தொடா்பான விவரங்களைப் பெறலாம் என்றாா்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதிய அடையாள அட்டை, மண்வள அட்டை, சூரிய மின்விளக்கு பொறி, இயற்கை உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை வேளாண்மைத் துறை இணை இயக்குநா் துரைசாமி, துணை இயக்குநா் ரமணன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் சத்தியமூா்த்தி, சிவபெருமாள், வேளாண்மை அலுவலா் மதன்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் ரமேஷ், சதீஷ்குமாா், பெருமாள், சிவரஞ்சனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, வேளாண்மைத் துறை இயக்குநா் தட்சிணாமூா்த்தி தான் கல்வி பயின்ற கீழ்க்கொடுங்காலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com