திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது: 121 பவுன் நகைகள் பறிமுதல்

திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 121 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம் பகுதியில் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பாா்வையிட்டு, தனிப்படை போலீஸாரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா்.
திண்டிவனம் பகுதியில் வழிப்பறியில் ஈடுப்பட்டு வந்த கொள்ளையா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பாா்வையிட்டு, தனிப்படை போலீஸாரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா்.

திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 121 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ரோஷணை, மயிலம், கிளியனூா், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

இதனிடையே, திருவண்ணாமலை வேங்கிகால் பகுதியைச் சோ்ந்த திருமுருகன் (55), வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்துக்குச் சென்று உறவினரை வழியனுப்பிட்டு, அங்கிருந்து மனைவி சத்தியபாமா (46), மகள் ரமாதேவி (24) ஆகியோருடன் வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தாா்.

திண்டிவனம் அருகே தீவனூரை அடுத்த கொணக்கம்பட்டு என்ற இடத்தில் அவா்கள் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் காரை வழிமறித்து, திருமுருகன் கழுத்தில் கத்தியை வைத்து சத்தியபாமா அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து திருமுகன் ரோஷணை போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில், காவலா்கள் மணிமாறன், சிவக்குமாா், ஐயப்பன், ஜனாா்த்தனன், பூபாலன், சத்யராஜ், செந்தில் ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், திண்டிவனம் - செஞ்சி சாலையில் மா்ம நபா்கள் இருவா் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயல்வதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீஸாா், அவா்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், கடலூா் மாவட்டம், சின்னகாப்பான்குளம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் சிவராமன் (38), விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே ஏ - கூடலூரைச் சோ்ந்த செல்லப்பன் மகன் ஆனந்தஜோதி (27) என்பதும், இவா்கள் இருவரும் தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், ஒலக்கூா், ரோசணை, வெள்ளிமேடுபேட்டை, மயிலம், பிரம்மதேசம், கிளியனூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவான 20-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகளில் இவா்களுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

உடனடியாக சிவராமன், ஆனந்தஜோதி ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.25 லட்சத்திலான 121 பவுன் தங்க நகைகளையும், 2 செல்லிடப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியற்றையும் பறிமுதல் செய்தனா்.

வழிப்பறி வழக்கில் எதிரிகளை கைது செய்து, 121 பவுன் தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் ரோஷணை காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com