மின்னணு சாதனக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற அறிவுரை

மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றி, மின்சாதனம், மின்னணு சாதனக் கழிவுகளை

மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றி, மின்சாதனம், மின்னணு சாதனக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டுமென விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 
மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்களான கணிணி, மடிக்கணினி, தொலைபேசி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, குழல் விளக்கு போன்றவை பயன்படுத்திய பிறகு ஆபத்து கழிவுகளாக மாறும். இதுபோன்ற கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் அகற்றுதல் குறித்த மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகளை  மத்திய 
அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், கடந்த  2016 அக்டோபர் 1 முதல் அமல்படுத்தியது.  
இந்த விதிகளை அமல்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுகளை பின்பற்றிட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
அதன்படி, மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களின் தயாரிப்பாளர்கள், தங்களது பொருள்களை விற்பனையாளர்கள் அல்லது ஆன்லைன் மூலமாக விற்பனை செய்த பிறகு, அந்தப் பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன், தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு' என்ற அடிப்படையில் அவற்றை திரும்பப்பெற்று மறுசுழற்சிக்கு அனுப்புவது அவர்களது கடமை.
தமிழகத்தில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களை கையாளும் உற்பத்தியாளர்கள், மறுசுழற்சி செய்வோர்,  மின்னணுக் கழிவு சேகரிப்பு மையங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். 
இந்த மின்னணுக் கழிவுகள் சேகரிப்பு செய்யும் மையங்கள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மையங்கள் மூலம் மின்னணுக் கழிவுகள், சரியான முறையில் சேகரிக்கப்பட்டு, மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தெடுப்போருக்கு அனுப்பப்பட வேண்டும். 
மின்னணுப் பொருள்களை 
விற்பனை செய்வோர், விற்பனை செய்யப்பட்ட பொருள்களின் ஆயுள்காலம் முடிந்தவுடன் அதனை நுகர்வோரிடமிருந்து மீண்டும் திரும்பப் பெறும் வகையில், மின்னணுக் கழிவுகளை சேகரிப்பதற்கான பெட்டி அல்லது தொட்டி அல்லது ஒப்படைப்பு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். 
சேகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவுகள், தயாரிப்பாளர்களால் நியமிக்கப்பட்ட சேகரிப்பு மையங்கள் அல்லது மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். மின் மற்றும் மின்னணு சாதனங்களை பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் அரசு, தனியார் துறைகள் தாங்கள் வெளியேற்றும் மின்னணுக் கழிவுகள்,  தயாரிப்பாளர்களால் வைக்கப்படும் சேகரிப்பு மையங்களுக்கு அல்லது மறுசுழற்சி தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும். 
இது தொடர்பான தகவல்களும்,  மின்னணுக் கழிவுகள் பிரித்தெடுத்தல் மற்றும் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை குறித்த விவரங்கள் வாரிய இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com