குறைந்த விலையில் கம்பு கொள்முதல்: 3 இடங்களில் விவசாயிகள் மறியல்

குறைந்த விலையில் கம்பு கொள்முதல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் 


விழுப்புரம்: குறைந்த விலையில் கம்பு கொள்முதல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் முன் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கம்பு, தினை வரத்து அதிகளவில் உள்ளது.
இங்கு, திங்கள்கிழமை வழக்கமான விலையை விட கம்பு மூட்டைக்கு (100 கிலோ) ரூ.1,300 முதல் ரூ.1,500 என விலை வீழ்ச்சியடைந்தது. அதே போல, தினை விலையும் வீழ்ச்சியடைந்தது. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் கிழக்கு பாண்டி சாலையில் திங்கள்கிழமை மாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, விவசாயிகள் கூறியதாவது: கடந்த வாரம் கம்பு மூட்டைக்கு ரூ.2,500-ரூ.2,300 வரை விற்பனையாது. ஆனால், தற்போது, ரூ.1000 குறைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. 3 மூட்டை கம்பு மகசூல் எடுப்பதற்கு ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. செலவு செய்த தொகையில் பாதி கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. தானியங்களுக்கு நியாயமான விலை தராததுடன், பணத்தையும் உடனடியாக பட்டுவாடா செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். ஆகவே, கம்புக்கு நியாய விலை வழங்கவும், உடனடி பணம் பட்டுவாடா செய்யவும் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
 பின்னர், நிகழ்விடத்துக்கு வந்த விழுப்புரம் மேற்கு போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, பேசி தீர்க்க வேண்டுமே தவிர, மறியலில் ஈடுபடுவது முறையாகாது என போலீஸார் அறிவுறுத்தினர். இதனை ஏற்று விவசாயிகள் மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டை: இதேபோல, உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் கம்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் திங்கள்கிழமை இரு முறை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கடந்த வாரம், ரூ.2,400 முதல் ரூ.2,200 வரையில் கொள்முதல் செய்யப்பட்ட 100 கிலோ கம்பு மூட்டை, தற்போது ரூ.1300 முதல் ரூ.1700 வரையில் குறைவாக கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறி, விவசாயிகள் பிற்பகல் 3 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மீண்டும்  மாலை 4.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். 
விவசாயிகளின் போராட்டம் காரணமாக, உளுந்தூர்பேட்டை-விழுப்புரம், விழுப்புரம்-விருத்தாசலம் ஆகிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காவல் துறையினர், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
 திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகேயுள்ள அரகண்டநல்லூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கம்பு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதைக் கண்டித்தும், உடனடியாக பணப்பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்தும் திங்கள்கிழமை மாலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலைக் கைவிட்டனர்.
 சிறு தானிய உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் விழுப்புரம் மாவட்டத்தில், அந்த தானியங்களுக்கு உரிய விலை அளித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com