தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட தேர்தல் அதிகாரி


விழுப்புரம்:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்,  திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான இல.சுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசியதாவது: தேர்தல் நன்னடத்தை விதிகள் செப்.21 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.   
மாவட்டத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக, ஒரு தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம், 11 தொகுதிகளுக்கும் 33 பறக்கும் படையினர் மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கூடுதலாக 2 பறக்கும் படையினரும் தொடர்ச்சியாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். இவர்களுடன் 33 நிலையான கண்காணிப்பு குழுவும் இயங்கும். 
இந்தக் குழுவில் விடியோ 
கிராபர்கள் இடம் பெறுவர். வேட்பாளர்களின் செலவு கணக்குகளை கண்காணிப்பதற்கு, விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு குழு செயல்படும். 
தகவல் மையத்தில் புகார் அளிக்கலாம்: விக்கிரவாண்டி தொகுதியில் 2,23,387 வாக்காளர்கள் உள்ளனர்.  275 வாக்குச்சாவடிகள் உள்ளன.  பதற்றமானவையாக 18 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில்,  தற்போது 32 வாக்குச்சாவடிகள் கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு மத்திய அரசு ஊழியர்கள் 50 பேர் நுண்பார்வையாளர்களாகச் செயல்படுவர்.  வாக்குப் பதிவுக்கு 658 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 528 விவிபேட் சாதனங்கள் தயார் நிலையில் உள்ளன.  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் மையம் "1950' என்ற இலவச அழைப்புடன் இயங்குகிறது.  அதில்,  புகார்களைத் தரலாம், தகவல்களைப் பெறலாம். 
கட்சியினர் சுவர் விளம்பரங்கள் செய்திருந்தால், அதனை செவ்வாய்க்கிழமை (செப்.24) மாலைக்குள் அழித்துவிட வேண்டும். அரசு தரப்பில் கட்சி சுவர் விளம்பரங்களை அழித்தால் அதற்குரிய அபராதம், சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்கப்படும். 
பிரசாரத்தின்போது தேர்தல் நன்னடத்தை விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். விதி
மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கக் கூடாது. சாதி, மத ரீதியான பிரசாரம் கூடாது. வழிபாட்டுத் தலங்களிலும் பிரசாரம் செய்யக் கூடாது.  வேட்பாளரின் தேர்தல் செலவினம் ரூ.28 லட்சமாகும்.  அனுமதி பெறாத பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
பறக்கும் படையினருக்கு பயிற்சி: முன்னதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர்,  தேர்தல் விதிமீறல்கள், பிரச்னைகள் போன்றவற்றை கண்காணிக்கவே பறக்கும்படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும், பணம், பரிசு பொருள்களைப் பிடிப்பதுடன் மட்டுமல்லாமல், மதுபானம் கடத்தல், வாக்களிப்பை தடுப்பவர்கள் போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும். செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றார். 
கூட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,  கூடுதல் கண்காணிப்பாளர் சரவணகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வீ.பிரபாகர், எஸ்.ஸ்ரீதர் மற்றும் கோட்டாட்சியர்கள்,  வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  வேளாண் அதிகாரிகள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com