தமிழ் பேசத் தெரியாத தலைமுறை உருவாகியுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் அழிந்து வருகிறது என்றும், தமிழ் பேசத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.


தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் அழிந்து வருகிறது என்றும், தமிழ் பேசத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
விழுப்புரத்தில் பாஜக சார்பில் தேசஒற்றுமை பிரசாரம் என்ற தலைப்பில், அரசமைப்புச் சட்டம் 370-ஆவது பிரிவு நீக்கம் குறித்த மக்கள் சந்திப்புக் கூட்டம் தனியார் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கும்போது 565 சமஸ்தானங்கள் இருந்தன. அப்போது, பிரிட்டிஷ் அரசாங்கம் சமஸ்தான மகாராஜாக்களுக்கு, இந்தியாவுடன் இணையலாம், பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது தனிநாடு கோரலாம் என்ற மூன்று சலுகைகளை அளித்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபபாய் படேல் அனைவரையும் ஒருங்கிணைத்து சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். 
சுதந்திரத்துக்குப் பிறகு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை அம்பேத்கர், படேல் போன்றவர்கள் எதிர்த்தனர்.
அரசியலமைப்பு சட்டம் 370-ஐ அறியாத மக்கள் கூட இப்போது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அறிந்துகொண்டனர் என்றார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ஐநா சபையில் பேசிய பிரதமர், உலக நாடுகள் மத்தியில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதற்கு 8 கோடி தமிழர்கள் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் அழிந்து வருகிறது. தமிழ் பேசத் தெரியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. 
இது யாருடையை தவறு?
பிரதமரின் வெளிநாட்டு பயணத்தால் அதிக முதலீடுகள் நமக்கு வரும், தொழில் துறை மேம்படும். தமிழக இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்.
நீட் தேர்வு விதிகளை கடுமையாக்க வேண்டும். சாதாரண மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்வதில்லை. கோடீஸ்வரர்களின் பிள்ளைகள்தான் தவறு செய்கின்றனர்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக, ஏற்கெனவே மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியபோது திட்டத்தை கைவிடப் போவதாக கூறினர். அந்தத் திட்டத்தின் நன்மை, தீமையை ஆராய வேண்டும். அந்தத் துறையின் விஞ்ஞானிகள் சொல்வதைக் கேட்க வேண்டும். தமிழக மக்களைப் பாதிக்கும் வகையில் எதையும் மத்திய அரசு செய்யாது என்றார் பொன். ராதாகிருஷ்ணன். முன்னதாக, பாஜக அறிவுசார் பிரிவு மாவட்டத் தலைவர் எம்.தனசேகரன் வரவேற்றார்.
பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆதவன், பி.சரவணன், ஜெ.சுகுமாரன்,  சிவ.தியாகராஜன், வி.சுகுமார், ஆர்.விநாயகம், ஆர்.ஜெயக்குமார், பி.ராஜிலு, பாலசுப்பிரமணியன், ஜி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com