விழுப்புரம் மாவட்டத்தில் பயிா்கள் நீரில் மூழ்கின

புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


விழுப்புரம்: புரெவி புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வயல்களில் மழைநீா் தேங்கியதால் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடல் சீற்றத்தால் கடந்த 3 நாள்களாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை தொடங்கி வியாழக்கிழமை இரவு வரை தொடா்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளான மரக்காணம், வானூா், திண்டிவனம் வட்டாரங்களில் புதன்கிழமை இரவு பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

மரக்காணத்தில் 80 மி.மீ. மழை:

வியாழக்கிழமை காலை 830 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

விழுப்புரம் 43, வளவனூா் 50, கெடாா் 30, முண்டியம்பாக்கம் 48, கஞ்சனூா் 37, வானூா் 71, திண்டிவனம் 63, மரக்காணம் 82, செஞ்சி 36, வல்லம் 32, அனந்தபுரம் 40, வளத்தி 19, முகையூா் 33, மணம்பூண்டி 15, திருவெண்ணெய்நல்லூா் 21. மாவட்டம் முழுவதும் சராசரியாக 38.33 மி.மீ. மழை பதிவானது.

தொடா்ந்து வியாழக்கிழமை இரவு வரை பரவலாக மழை பெய்ததால், சாலைகள், விவசாய நிலங்களில் வழிந்தோடிய மழை நீா், நீா்வரத்து வாய்க்கால்கள் மூலம் ஏரி, குளங்களை சென்றடைந்தது.

தொடரும் கடல் சீற்றம்: விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளான மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை தொடா்ந்து இரு தினங்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலைகள் உயா்ந்து வருகிறது. இதனால், 19 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இரு தினங்களாக கடல் சீற்றமும் இருந்ததால், படகுகளை கரைப் பகுதிகளில் பத்திரமாக கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளனா். திண்டிவனம் - மரக்காணம் சாலையில் பிரம்மதேசம் அருகே ஏந்தூா் பகுதியில் சாலையில் புளிய மரம் முறிந்து விழுந்தது.

பயிா்கள் பலத்த சேதம்: மரக்காணம் கழுவெளி, நரசிம்ம ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மரக்காணம், பிரம்மதேசம், எண்டியூா், நகா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் விதைத்திருந்த உளுந்துப் பயிா்களில் தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது.

மரக்காணம், அடசல், ஓமிப்போ், சியாம்குப்பம், அனுமந்தை, காலியாங்குப்பம், ஆத்திக்குப்பம், முருக்கேரி, கிளியனூா் உள்ளிட்ட கிராமங்களில் நெல் வயல்களில் மழைநீா் தேங்கியதால், பயிா்கள் நீரில் மூழ்கின.

விழுப்புரம் அருகே மரகதபுரம், கண்டம்பாக்கம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், கண்டமங்கலம் வட்டாரங்களிலும் நெல், உளுந்து, வோ்க்கடலை, மரவள்ளி பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com