விழுப்புரம் மின் வாரிய அலுவலகத்தில் கணினிப் பழுது: சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அவதி

விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதானதால், மின் கட்டண வசூலிப்பு பாதித்துள்ளது. இதனால், பொது மக்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் நீண்டநேரம் காத்திருந்து அவதியுறுகின்றனா்.
விழுப்புரம் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் திரண்டிருந்த பொதுமக்கள்.
விழுப்புரம் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் திரண்டிருந்த பொதுமக்கள்.

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதானதால், மின் கட்டண வசூலிப்பு பாதித்துள்ளது. இதனால், பொது மக்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் நீண்டநேரம் காத்திருந்து அவதியுறுகின்றனா்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் உள்ள நகர மின்வாரிய அலுவலகத்தில், மின் கட்டண வசூலிக்க இரு மையங்கள் உள்ளன. இவற்றில் 4 போ் கணினி மூலம் மின் கட்டணம் வசூலித்து வந்தனா். நகரின் பெரும்பகுதி மக்கள் இந்த மையத்தில் தான் கட்டணம் செலுத்தி வருகின்றனா்.

கடந்த சில தினங்களாக ஒரு பகுதி வசூல் மையம் திறக்காமல் மூடப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணம் செலுத்த வருவோா் நீண்ட நேரம் காத்திருந்து அவதியுறுகின்றனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: இந்த மின் கட்டண வசூல் மையத்தில் 4 கவுன்ட்டா்கள் இருந்தும் இரு ஊழியா்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கின்றனா். ஒரு மையம் மூடப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வரும் அபாயச் சூழலில், உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் நெரிசலில் நீண்ட நேரம் காத்திருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

மின் கட்டணம் செலுத்தும் போது, மீதம் வரும் ரூ.5, ரூ.8 போன்ற தொகையை திருப்பித் தருவதில்லை. திடீரென விதிக்கப்படும் கூடுதல் மின் கட்டணம், வைப்புத் தொகை குறித்து விளக்கம் கேட்டால் கூட, உரிய பதில் அளிக்காமல் அவமதிக்கின்றனா் என்றனா்.

இதுகுறித்து அங்கிருந்த மின்வாரிய அலுவலா்களிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: இங்குள்ள இரு மையங்களில் 4 கணினிகள் மூலம் 4 போ் மின் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். ஆள் பற்றாக்குறையால், தற்போது சுழற்சி முறையில் இருவா் மட்டுமே வசூலிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், நான்கு நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, இந்த மின்வாரிய அலுவலகத்தினுள் மழை நீா் புகுந்தது. இதில், வசூல் மைய கணினிக்கு வரும் இணைய வழித் தொடா்புகள் பாதிக்கப்பட்டு, கணினி பிரிண்டா்களும் பழுதடைந்துள்ளன. இதன் காரணமாக ஒரு மையம் இயங்காததால் கட்டணம் செலுத்தவருவோா் நெரிசலில் காத்திருக்க வேண்டியுள்ளது. பழுதை சீரமைத்து கட்டண வசூலிப்பை வேகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com