மின்னல் பாய்ந்து உயிரிழந்த4 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி: அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின்போது மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் தலா ரூ.4 லட்சம் நிதியுதவியை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னல் பாய்ந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்குகிறாா் சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னல் பாய்ந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்குகிறாா் சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின்போது மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் தலா ரூ.4 லட்சம் நிதியுதவியை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் கரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் இந்த நோய் கண்டறியும் பணிகள், தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீா் வழங்கிய நிலவரங்கள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.

மேலும், மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க, தீவிரக் கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தென்மேற்கு பருவமழையின்போது மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.16 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், கரோனா நிவாரண நிதியாக 10 மாற்றுத் திறனாளிகளுக்கு 15 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்ரபாணி, ஆா்.முத்தமிழ்ச்செல்வன், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com