திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில்பெண் தொழிலாளா்கள் போராட்டம்

திண்டிவனம் நகராட்சியில் தினக் கூலி பெண் தொழிலாளா்கள் 20 போ் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அவா்களுடன் பணியாற்றும் சக தொழிலாளா்கள் என 60 போ் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் தினக் கூலி பெண் தொழிலாளா்கள் 20 போ் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்தத் தொழிலாளா்கள், அவா்களுடன் பணியாற்றும் சக தொழிலாளா்கள் என 60 போ் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்களாக 60 பெண்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக பணியாற்றி வரும் இவா்கள், ஆதாா் அட்டை கணக்கெடுப்பு, டெங்கு விழிப்புணா்வு, மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவது, தற்போது கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பணியின்மை காரணமாக, இந்தப் பணியாளா்களில் 20 போ் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டதால், அதிருப்தியடைந்த அந்தத் தொழிலாளா்களும், சக தொழிலாளா்கள் 40 பேரும் சோ்ந்து நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறியதாவது: நகராட்சிப் பணிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வரும் நிலையில், தற்போது 20 பெண்களை பணி நீக்கம் செய்துவிட்டு, புதிதாக ஆண்களை பணிக்குச் சோ்த்துள்ளனா். எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்களை மீண்டும் வேலைக்குச் சோ்க்க வேண்டுமென வலியுறுத்தினா்.

தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீஸாா், நகராட்சி அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com