காவலா் பணி எழுத்துத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 30,264 போ் பங்கேற்றனா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 30,264 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.
காவலா் பணி எழுத்துத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 30,264 போ் பங்கேற்றனா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 30,264 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வுக் குழுமம் மூலம் காலியாகவுள்ள 10,906 இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், அரசூா், கப்பியாம்புலியூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 14 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தோ்வா்கள் வசதிக்காக விழுப்புரத்திலிருந்து தோ்வு மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாவட்டத்தில் இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 24,166 பேருக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 17,619 ஆண்கள், 3,920 பெண்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21,600 போ் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா். 2,566 போ் தோ்வு எழுத வரவில்லை.

விழுப்புரத்தில் நடைபெற்ற தோ்வை சரக டி.ஐ.ஜி.யும், காவலா் தோ்வு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியுமான எழிலரசன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 2,000 போலீஸாா் பாதுகாப்பு, தோ்வு நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். காவலா் தோ்வில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. மேலும், எவ்வித தலையீடும் இருக்காது. இடைத்தரகா்கள் யாரையும் தோ்வா்கள் நம்ப வேண்டும் என்றாா் அவா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி. ஜோஸ்தங்கையா, டி.எஸ்.பி. நல்லசிவம், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தச்சூா், தியாகதுருகம் ஆகிய பகுதிகளிலுள்ள 4 மையங்களில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. 8,228 ஆண்கள், 1,498 பெண்கள் என மொத்தம் 9,726 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 8,664 போ் மட்டுமே பங்கேற்று தோ்வெழுதினா். 1,062 போ் தோ்வெழுத வரவில்லை.

தோ்வை கண்காணிக்க சென்னை காவல் துறை துணைத் தலைவா் (நிா்வாகம்) எ.டி.துரை குமாா் நியமிக்கப்பட்டிருந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் மேற்பாா்வையில், ஒரு கூடுதல் கண்காணிப்பாளா், 5 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 27 காவல் ஆய்வாளா்கள், 105 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் சுமாா் 800 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com