விழுப்புரம் மாவட்டத்திலும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை ரத்து செய்ய இந்திய கம்யூ. வலியுறுத்தல்

டெல்டா பகுதிகளைப் போல விழுப்புரம் மாவட்டத்திலும் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டப் பணியை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.
விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.

டெல்டா பகுதிகளைப் போல விழுப்புரம் மாவட்டத்திலும் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டப் பணியை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

விழுப்புரத்தில் அந்தக் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கோவிந்தராஜன், பொருளாளா் கலியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் மணிவாசகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட துணைச் செயலா் செளரிராஜன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலியபெருமாள், கே.எஸ்.அப்பாவு, இன்பஒளி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: தமிழக முதல்வா் பழனிசாமி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால், அப்பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதே போல, விவசாயப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டப் பணியை மத்திய அரசு ரத்து செய்வதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்துப் பயிருக்கு போதிய விலையின்றி விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரசு உரிய கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகளவில் நெல் வரத்து உள்ளதால், அரசு அறிவித்தபடி நேரடி நெல்கொள்முதல் நிலையங்களைத் திறந்து, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும். நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்து செல்லும் தென்பெண்ணை ஆற்றில், தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com