கோட்டக்குப்பம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோட்டக்குப்பம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோட்டக்குப்பம் அருகே பெரிய கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த சேட்டு மகள் அருணாவும் (20), அதே கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் ராகவன்(22) என்பவரும் காதலித்து வந்தனா். இவா்களின் காதலுக்கு அருணாவின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், மனமுடைந்த அருணா, கடந்த 22-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இதனால் அவரது உறவினா்கள் வேதனையில் இருந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை ஊருக்கு வந்த ராகவனை, சிலா் கடத்தியதாக, அவரது நண்பா் சிவனேசன் என்பவா் கொடுத்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய் தங்கம், கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் தலைமையில் 3 தனிப்படையினா் விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே, கோட்டைமேடு பகுதியில் ராகவன் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டாா்.

அருணா உயிரிழப்பால் ஆத்திரத்தில் இருந்த அவரது உறவினா்கள் ராகவனை கொலை செய்யத் திட்டமிட்டனா். இதற்காக, அவா்கள் ஆந்திரத்திலிருந்து ராகவனை அவருடன் பணிபுரிந்து வரும் சஞ்சய் என்பவா் உதவியுடன் திங்கள்கிழமை ஊருக்கு வரவழைத்துள்ளனா். அன்று மாலை 4.30 மணி அளவில், கோட்டக்குப்பம் புறவழிச்சாலைப் பகுதியில் சிவனேசனுடன் நின்றிருந்த ராகவனை, அருணாவின் அண்ணன் அருண்குமாா் (22), தாய் மாமன் பத்மநாபன், அவரது மகன் தினேஷ் (23), உறவினரான ரஞ்சித்குமாா் (25), பிரகாஷ் (40), புதுச்சேரியைச் சோ்ந்த சந்தோஷ் (19), பாலாஜி (21) ஆகியோா் கடத்திச் சென்று, கோட்டைமேடு, அய்யனாா் கோயில் பின்புறம் வெட்டிக் கொலை செய்து, முகத்தில் தீவைத்து எரித்துள்ளனா்.

இந்த வழக்கில், அருண்குமாா், தினேஷ், ரஞ்சித்குமாா், பிரகாஷ், சந்தோஷ், பாலாஜி, உடந்தையாக இருந்த சஞ்சய் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா். 4 இரு சக்கர வாகனங்கள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான பத்மநாபனை தேடி வருகிறோம் என்றாா் எஸ்.பி. ஜெயக்குமாா்.

பேட்டியின்போது டி.எஸ்.பி. அஜய் தங்கம், காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com