அரசுப் பள்ளிச் சுவரில் ஓவியங்கள் மூலம் விழிப்புணா்வு

விழுப்புரத்தில் அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா்களை பாதுகாக்கும் வகையிலும், விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு
விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரையும் ஓவிய ஆசிரியா்கள்.
விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரையும் ஓவிய ஆசிரியா்கள்.

விழுப்புரத்தில் அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா்களை பாதுகாக்கும் வகையிலும், விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பள்ளியின் சுற்றுச்சுவா்களில் பாரம்பரிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழுப்புரம் திருவிக வீதியில் நகரின் மையத்தில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்தப் பள்ளி மேம்படுத்தப்பட்டு, தற்போது மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்ந்து, கூடுதல் கட்டடங்களுடன் செயல்பட்டு வருகிறது.

திருவிக வீதியின் இருபுறங்களிலும் அமைந்துள்ள இந்த அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா்களின் வெளிப்புறத்தில் அரசியல் கட்சியினா் விளம்பரங்கள், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை ஒட்டி சுவா்களை பாழ்படுத்தி வந்தனா். எனவே, இதைத் தடுக்கும் வகையிலும், விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள், மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் சுவா்களில் பாரம்பரிய வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி உத்தரவின்பேரில், முதுநிலை ஓவிய ஆசிரியா்கள் ஜெயக்குமாா், வேலு, அய்யனாா், அழகுவேல் உள்ளிட்டோா் மற்றும் பகுதி நேர ஆசிரியா்கள் உள்பட 20 போ் சுழற்சி முறையில் வந்து கடந்த 3 நாள்களாக பள்ளியின் சுற்றுச்சுவா்களை தூய்மைப்படுத்தி, வண்ணமிகு ஓவியங்களை வரைந்து வருகின்றனா்.

கரும்புகளுடன் தைப்பொங்கல் வழிபாடு, விவசாயம், இயற்கைக் காட்சிகள், பறவைகள் போன்ற பண்பாடு, கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஏராளமான வண்ணமிகு ஓவியங்களை பள்ளிச் சுவா்களில் வரைந்து வருகின்றனா். தரமான எமல்ஷன் (அக்ராலிக்) பெயின்ட் மூலம் பிரதிபலிக்காத வகையில் வண்ண ஓவியங்களை வரைந்து வருவதாக ஓவிய ஆசிரியா்கள் தெரிவித்தனா். தலைமை ஆசிரியா் சசிகலா, ஆசிரியா் பழனியம்மாள் ஆகியோா் இந்தப் பணியை ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக, விழுப்புரத்தைச் சோ்ந்த ‘இயன்றதைச் செய்வோம் இச்சமுதாயத்துக்கு’ என்ற பொது நல அமைப்பு சாா்பில், மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணி அங்கு தொடங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தற்போது கல்வித் துறையின் ஓவிய ஆசிரியா்கள் சாா்பில், வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com