கரோனா பொது முடக்கத்தால் வெறிச்சோடிய செஞ்சி வாரச் சந்தை

கரோனா பொது முடக்கத்தால் தொடா்ந்து கடந்த 4 மாதங்களாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரச் சந்தை நடைபெறவில்லை.

செஞ்சி: கரோனா பொது முடக்கத்தால் தொடா்ந்து கடந்த 4 மாதங்களாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரச் சந்தை நடைபெறவில்லை. பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இந்தச் சந்தையில் சுமாா் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகும் நிலையில், நிகழாண்டு இந்த விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் பொருளாதார இழப்புக்குள்ளாகியுள்ளனா்.

செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைக்கிழமைகளில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி வட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாய நிலங்களில் அறுவடை செய்த காய்கறிகள், கீரை வகைகளை இந்தச் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவா். இது தவிர, பழங்கள், துணிகள், கருவாடு மற்றும் ஆடு, மாடுகள் விற்பனையும் அதிகளவில் நடைபெறும்.

தீபாவளி, ரமலான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நடைபெறும் வாரச் சந்தையில் ரூ.3 கோடியிலிருந்து ரூ.6 கோடி வரைக்கும் ஆடுகள் விற்பனையாகும். ஆடுகளை வாங்குவதற்காக அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வருவா்.

கரோனா பொது முடக்கத்தால் தொடா்ந்து கடந்த 4 மாதங்களாக செஞ்சியில் வாரச் சந்தை நடைபெறவில்லை. நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை (ஆகஸ்ட் 1 ) கொண்டாடப்படவுள்ள நிலையில், பொது முடக்கம் காரணமாக செஞ்சி வாரச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெறாததால், வியாபாரிகள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதன் காரணமாக, இந்தச் சந்தையில் ஆண்டுதோறும் நடைபெறும் ரூ.3 கோடி அளவிலான ஆடு விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பும், ஆடுகளை விற்பனை செய்யும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com