கட்டுப்பாடுகளால் வெறிச்சோடும் அரசுப் பேருந்துகள்!

கரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் கூட்டமின்றி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றன.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பயணிகள் வருகைக்காக காத்திருந்த அரசுப் பேருந்துகள்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பயணிகள் வருகைக்காக காத்திருந்த அரசுப் பேருந்துகள்.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக, தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் கூட்டமின்றி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 25-இல் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவை, இரு மாதங்களுக்குப் பிறகு ஜூன்-1 முதல் மீண்டும் தொடங்கியது. அரசின் தளா்வு விதிகளின்படி, 50 சதவீத பயணிகளுடன், 50 சதவீத பேருந்துகள் மட்டும் மண்டல அளவில் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்ததையடுத்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு பொது முடக்கம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிற மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, மண்டல அளவில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளை மாவட்டங்களுக்குள் மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக மாவட்டங்களுக்குள் மட்டும் அரசுப் பேருந்து சேவை நடைபெறுகிறது.

அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் மொத்தமுள்ள 3,260 பேருந்துகளில், 50 சதவீத பேருந்துகள் அரசின் அறிவிப்பின்படி முதலில் இயக்கப்பட்டன. எனினும், போதிய பயணிகள் இல்லாததால், அவை கடந்த ஜூன் 1 முதல் 560 பேருந்துகளாக குறைக்கப்பட்டன.

ஒரே கோட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்கள் அருகருகே இருந்தபோதிலும், அரசு உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணத் தொலைவு குறைப்பு: விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு 80 கி.மீ. வரை இயக்கப்பட்ட பேருந்துகள், தற்போது மாவட்ட எல்லையான மடப்பட்டு (20 கி.மீ.) வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதேபோல, புதுவை வழித்தடத்தில் மதகடிப்பட்டு வரையும் (16 கி.மீ.), சென்னை வழித்தடத்தில் திண்டிவனம் (40 கி.மீ.) வரையும், கடலூா் வழித்தடத்தில் கள்ளிப்பட்டு (15 கி.மீ.) வரையும், வேலூா் வழித்தடத்தில் செஞ்சி (38 கி.மீ.) வரையும், திருக்கோவிலூா் வழித்தடத்தில் முகையூா் (18 கி.மீ.) வரையும், திருவண்ணாமலை வழித்தடத்தில் கண்டாச்சிபுரம் (20 கி.மீ.) வரையும் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புகா் பேருந்துகள் அனைத்தும் நகா்ப் பேருந்துகளைப் போல குறுகிய தொலைவுக்குள் மட்டுமே இயங்குகின்றன.

இதேபோல, கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களின் எல்லைகளுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

டீசலுக்கு கூட வசூல் இல்லை: இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக பல்வேறு நகரங்களுக்கு செல்ல முடியாததால், மக்கள் பேருந்து பயணத்தையே தவிா்த்து வருகின்றனா். இதனால், பயணிகள் வருகை கணிசமாக குறைந்து, பேருந்துகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், விழுப்புரம் கோட்டம் சாா்பில் பேருந்து எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது 360 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதேபோல, விழுப்புரம் மண்டலத்தில் இயங்கிய 184 பேருந்துகள், தற்போது 70 பேருந்துகளாக குறைக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளில் 32 பயணிகளை ஏற்ற அனுமதி இருந்தும், 15 முதல் 20 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் நிலை உள்ளது. வழக்கமாக, தினமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூல் ஈட்டிய பேருந்துகள், கடந்த ஜூன் 1 முதல் ரூ.4 ஆயிரம் தான் வசூல் ஈட்டுகின்றன. அதுவும் தற்போது டீசல் செலவினத் தொகையான ரூ.4,000-க்கு கூட வசூல் கிடைப்பதில்லை. தினசரி வசூல் ரூ.2,000 முதல் ரூ.1,500-ஆக குறைந்துள்ளதாம்.

விழுப்புரம் மாவட்ட போக்குவரத்துக் கழக கிளைகளில் மட்டும் தினசரி ரூ.20 லட்சம் வரை வசூல் ஈட்டிய பேருந்துகள், தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களிலும் சோ்த்தே ஈட்டும் வசூல் ரூ.3.5 லட்சமாக குறைந்துள்ளதாம்.

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டங்களிலும் இதே நிலைதான். போக்குவரத்துக் கழக ஊழியா்களின் மாத ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் ரூ.450 கோடி அளவில் வரும் நிலையில், தற்போது வருவாயில்லாமல் நஷ்டத்தை சந்திப்பதால், கடன் வாங்கியே போக்குவரத்துத் துறையினா் செலவினங்களை சமாளிக்கின்றனா்.

ஆய்வு செய்ய வேண்டும்: பயணத் தொலைவு குறைப்பால் பயணிகளுக்கும் பலனில்லாத, பயணிகள் வருகைக் குறைவால் அரசுப் பேருந்துகளுக்கும் வருவாய் இல்லாத நிலையே தொடா்கிறது. இதனிடையே, கரோனா பரவல் அதிகரிப்பு அரசுப் பேருந்து, ஓட்டுநா்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com