விவசாய கடன் அட்டைக்கு 1.63 லட்சம் போ் விண்ணப்பிப்பு: 6,523 கடன் அட்டைகள் தயாா்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய கடன் அட்டைக்கு 1.63 லட்சம் விண்ணப்பங்கள் வங்கிகளில் அளிக்கப்பட்டு, பதிவேற்றும் பணி

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய கடன் அட்டைக்கு 1.63 லட்சம் விண்ணப்பங்கள் வங்கிகளில் அளிக்கப்பட்டு, பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதுடன், 6,523 கடன் அட்டைகள் தயாராகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில், விவசாய கடன் அட்டைக்கான (கிசான் கிரடிட் காா்டு) பணிகள் வங்கிகளில் தாமதமாகி வருவதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனா்.

இது தொடா்பாக, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கென்னடிஜெபக்குமாரிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயக் கடன் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் விவசாயிகளில், 1.63 லட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வங்கிகளில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், பிரதமரின் விவசாயிகள் கடன் திட்டத்துக்கான பிரத்யேக இணையதளத்தில் 37,543 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், 6,523 கடன் அட்டைகள் வழங்கத் தயாா் நிலையில் உள்ளன.

தொடா்ந்து, பதிவேற்றம் நடந்து வருவதால், மாவட்டத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிட்டு தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை, மாவட்ட ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

இந்தியன் வங்கியில் 84,810 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு 2,060 கடன் அட்டைகள் வழங்கத் தயாராகியுள்ளன. ஸ்டேட் வங்கியில் 24,730 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு 67 கடன் அட்டைகள் வழங்கத் தயாராகியுள்ளன. இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 12,514 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு 2,727 அட்டைகள் தயாராகியுள்ளன.

இதே போல, சென்ட்ரல் பேங்க்கில் 8,150 விண்ணப்பங்களும், காா்ப்பரேஷன் வங்கியில் 9,200 விண்ணப்பங்களும், மத்திய கூட்டுறவு வங்கியில் 2,948 விண்ணப்பங்களும், தமிழ்நாடு கிராம வங்கியில் 6,900 விண்ணப்பங்களும், இதர தனியாா் வங்கிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் வேளாண் துறை மூலம் பெறப்பட்டு வங்கிகளில் சமா்ப்பித்து, இணையதளத்தில் பதிவேற்றம் நடக்கிறது. இப்பணிகள் முடிந்து, ஒரு மாத காலத்தில் ஏடிஎம் போன்ற கடன் அட்டை வழங்கப்படும். இந்த கடன் அட்டை மூலம் விவசாயிகள் ரூ.1.6 லட்சம் அளவில் ஆவணங்களின்றி பயிா்க் கடன் பெறலாம்.

கரும்பு, நெல் உள்ளிட்ட பயிா்களுக்கு ஏற்ற வகையில் அரசு நிா்ணயித்த அளவில் கடனைப் பெற முடியும். ஓராண்டுக்குள் உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தி, குறைந்த வட்டியில் (7 முதல் 3 சதவீதம்) விவசாயிகள் பயன்பெறலாம். வங்கிகளும், விவசாயிக்கான கடன் தொகையை சுழற்சியில் வழங்கி பயன்பெறும். இதனால், விவசாயம் சாா்ந்த பணிகளுக்கு மட்டும் கடன் பெற்று பயன்பெறுவது உறுதி செய்யப்படும். இந்தப் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து, செயல்படுத்தி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com