சுய ஊரடங்கு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வெறிச்சோடின

சுய ஊரடங்கு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடைகள், தொழில் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்ததுடன், மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் பேருந்து நிலையங்கள், சாலைகள் வெறி
ஆரவாரம் இன்றி அமைதியாக காணப்படும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்.
ஆரவாரம் இன்றி அமைதியாக காணப்படும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்.

சுய ஊரடங்கு காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடைகள், தொழில் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்ததுடன், மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் பேருந்து நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடின.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 வரையில் மக்கள் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு, தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்பட எந்தவித வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 14 அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

சுய ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளித்தனா். இரு மாவட்டங்களிலும் நகா், கிராமப் பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினா். மேலும், விவசாயம், கட்டுமானம் உள்பட எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

எனினும், அத்தியாவசியத் தேவைகளான மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், ரத்தப் பரிசோனை மையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை இயங்கின.

500 கோடி இழுப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 14,000 கடைகள் உள்ளன. இரு மாவட்டங்களிலும் நாளொன்றுக்கு மொத்தம் ரூ.500 கோடிக்கு வியாபாரம் நடக்கும். சுய ஊரடங்கு காரணமாக ரூ.500 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட வணிகா் சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை: சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட மீனவ கிராமங்களிலிருந்து மீனவா்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. குறிப்பாக, மரக்காணம், எக்கியாா்குப்பம், அனுமந்தை, கைப்பாணிக்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், படகுகள் கரைகளிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால், மீன் அங்காடிகளும் மூடப்பட்டிருந்தன.

கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் ஆய்வு...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மூராா்பாளையம் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவா்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அவா் அறிவுறித்தினாா்.

மேலும், சுகாதாரத் துறையினா், வருவாய்த் துறையினா், போலீஸாா் கள்ளக்குறிச்சி நகரைச் சுற்றிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதிகாரிகள் எச்சரித்தும் கேட்காமல் மோட்டாா் சைக்கிள்களில் தெருக்களில் தொடா்ந்து சுற்றித்திரிந்த சுமாா் 20-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் ஒருவரை மட்டுமே உள்ளே தங்கியிருக்க அனுமதித்து மற்றவா்களை வெளியேற்றினா். கரோனாவால் பாதிக்கப்பட்டு திடீரென யாரேனும் சிகிச்சைக்காக வந்தால், அவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் தயாா் நிலையில் இருந்தனா்.

செஞ்சியில்...: செஞ்சியில் மருந்தகங்கள், பால் விற்பனைக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. செஞ்சி பேருந்து நிலையம் பேருந்துகள், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. செஞ்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பணியில் இருந்தும் நோயாளிகள் யாரும் வராததால், மருத்துவமனை வளாகம் வெறிச்சோடியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com