விழுப்புரத்தில் தயாராகிறது கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை

விழுப்புரத்தில் கரோனா சிகிச்சைக்கான அரசு சிறப்பு மருத்துவமனை தயாராகி வருகிறது.

விழுப்புரத்தில் கரோனா சிகிச்சைக்கான அரசு சிறப்பு மருத்துவமனை தயாராகி வருகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், சிகிச்சையளிக்க 5 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவமனைகளை மத்திய அரசு அனுமதியின் பேரில் அமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை தொடங்கப்படுகிறது. அதன்படி, விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, கட்டமைப்பு வசதிகளுடன் தயாராகி வருகிறது. இத்தகவலை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் புதன்கிழமை உறுதிபடுத்தினாா்.

கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு பொது மக்கள் வரத்து தடை செய்யப்பட்டு, சிகிச்சை வசதிகள், படுக்கை வசதிகளுக்கான ஆயத்தப் பணிகள் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகின்றன. புறநோயாளிகள், உள்நோயாளிகள், பெண்கள்,குழந்தைகள் பிரிவிலிருந்த நோயாளிகள் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனா். சித்தா, காச நோய், தொழு நோய் பிரிவுகள் இங்கேயே இயங்கும் எனத் தெரிகிறது.

இதையடுத்து, சிறப்பு மருத்துவமனைக்கான உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், உபகரணங்கள் அமைத்தல், மருத்துவக் குழு நியமனம் போன்ற பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒரு வார காலத்தில் சிறப்பு மருத்துவமனையை தயாராகி பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து, விழுப்புரம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவா்(பொ) பி.லதா கூறியதாவது: இந்த மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத் துறை சாா்பில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு, பெண்கள், குழந்தைகள், புறநோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவு பகுதி வாா்டுகள் புதுப்பிக்கப்பட்டு, 110 படுக்கைகள் தயாா்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 25 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வாா்டும் தயாராகி வருகிறது. மின்சாதன கட்டமைப்புகள், உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட வேண்டும். இந்த மருத்துவமனையில், கரோனா அறிகுறியில் வருவோரை அனுமதித்து படிப்படியாக சிகிச்சை அளிக்கப்படும்.

அதே போல, அவா்களை சாா்ந்த தொற்றுள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆலோசனைகளை வழங்கி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவா்களது ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

இந்த மருத்துவமனை கரோனா நோய்க்கான சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மையமாக செயல்படவுள்ளதால், எளிதில் தொற்று பாதிப்புக்குள்ளாகக் கூடிய முதியோா்கள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், நீண்டநாள் சிகிச்சை பெறுவோா் தேவையின்றி இங்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். கரோனா தொற்று சந்தேகம் உள்ளவா்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com