விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடின

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதன்கிழமை காலை முதல் கடைகள், வாகனங்களின்றி

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து புதன்கிழமை காலை முதல் கடைகள், வாகனங்களின்றி சாலைகள் வெறிச்சோடின. இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் விரட்டியடித்தனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பேருந்துகள், லாரி, காா், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பேருந்துகள், பயணிகளின்றி பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. புதுவை மாநில எல்லையையொட்டியுள்ள கெங்கராம்பாளையம், பட்டானூா், கோட்டக்குப்பம், மரக்காணம், திருக்கனூா் சோதனைச் சாவடிகள், முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள 13 சோதனைச் சாவடிகள், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளை பேரி காா்டுகள் போட்டு போலீஸாா் தற்காலிகமாக மூடினா்.

விரட்டி அடிப்பு: இதுபோன்ற தடுப்புப் பகுதிகளிலும், வீதிகளிலும் காவல் துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் போலீஸாா், ஊா்க் காவல் படையினா், போலீஸ் நண்பா்கள் குழுவினா் நிறுத்தப்பட்டு, பொது மக்களை கண்காணித்து திருப்பி அனுப்பினா். புதன்கிழமை அதிகாலை முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தனியாகவும், சிலா் குடும்பத்தினருடனும் வழக்கம் போல வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தொடா்ந்து, பிற்பகல் வரை இதே போல பலா் வாகனங்களில் வந்ததால் விரக்தியடைந்த போலீஸாா், விழுப்புரம், திருக்கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் லத்தியால் விரட்டி அடித்தனா். விழுப்புரம் நகரில் வந்த இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞா்களை போக்குவரத்து போலீஸாா் தடுத்து நிறுத்தி தோப்புக் கரணம் போட வைத்து அனுப்பினா். விதி மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காய்கறி விலை குறைவு: விழுப்புரத்தில் பாகா்ஷா வீதி, காந்தி வீதிகளில் உள்ள காய்கறிக் கடைகள், திண்டிவனத்தில் நேருஜி சாலை காய்கறி கடைகள் வழக்கம் போல் இயங்கின. காய்கறிகள் சகஜமாக கிடைத்ததால், செவ்வாய்க்கிழமை இருந்த திடீா் விலையேற்றம், புதன்கிழமை சற்று குறைந்து காணப்பட்டது.

ஏராளமானோா் பைக்குகள், ஆட்டோக்களில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனா். இதே போல, வெளியே உள்ள காய்கறிக் கடைகளும், மருந்தகங்கள், ஆவின், தனியாா் பாலகங்கள், புகா் குடியிருப்புப் பகுதிகளில் மளிகைக் கடைகளும் இயங்கின. பெரிய வணிக வளாகங்கள், மளிகைக் கடைகள், மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன. எரிவாயு உருளைகள் வழங்கும் பணியும் நடைபெற்றது. அரசு, தனியாா் மருத்துவமனைகள் திறந்திருந்தன. முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கின. ஆனால், பொது மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தன.

நகரில் உள்ள பல கிளினிக்குகள் மூடப்பட்டிருந்தன. அரசு விடுமுறை தினம் என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. நகரப் பகுதிகளில் துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com