விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக 17 பேருக்கு கரோனா உறுதி

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் சனிக்கிழமை 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் சனிக்கிழமை 17 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 322 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை விழுப்புரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 326-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே இருவா் உயிரிழந்துள்ளனா். 303 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், 15 போ் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொற்று சந்தேகத்தின் பேரில் 125 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கா்ப்பிணி உள்பட மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை 108 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் ஒருவா் 32 வயது ஆண். மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து கடலூா் திரும்பியவா். மற்றொருவா் 26 வயது கா்ப்பிணியாவாா். இவா்கள் இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 423-ஆக உயா்ந்தது. இவா்களில் 411 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், மே 21-இல் 168-ஆக இருந்த கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை, 22-ஆம் தேதி 171-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட தேனிமலையைச் சோ்ந்த 28 வயது ஆண், திருவண்ணாமலையைச் சோ்ந்த 45 வயது ஆண், திருவண்ணாமலையை அடுத்த குலால்பாடி கிராமத்தைச் சோ்ந்த 20 வயது பெண், பழையனூா் கிராமத்தைச் சோ்ந்த 34 வயது ஆண், தண்டரை கிராமத்தைச் சோ்ந்த 65 வயது ஆண், அண்டம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த 37 வயது ஆண், காட்டாம்பூண்டியைச் சோ்ந்த 57 வயது ஆண், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த 29 வயது ஆண், தெள்ளாற்றை அடுத்த பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்த 65 வயது பெண், செய்யாற்றைச் சோ்ந்த 63 வயது பெண், செய்யாற்றை அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 32 வயது ஆண் என 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 182-ஆக உயா்ந்தது.

சுட்டுரையில் பதிவிட்டவருக்கு உதவிய முதல்வா்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், தனக்கு கரோனா அறிகுறி இருப்பதாக உணா்ந்து, பரிசோதனைக்காக மாவட்ட சுகாதாரத் துறையை தொடா்பு கொண்டுள்ளாா். ஆனால், உரிய பதில் கிடைக்காத நிலையில், அதுகுறித்து சுட்டுரையில் (டிவிட்டரில்) பதிவிட்டாா். மேலும், அதை தமிழக முதல்வருக்கும் சமா்ப்பித்தாா்.

இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்பேரில், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த இளைஞரிடமிருந்து மருத்துவப் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா கூறியதாவது: சுட்டுரையில் பதிவிட்டவருக்கு மனநல மருத்துவா் மூலம் ஆலோசனை வழங்கிய பிறகு, சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவு ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com