பெண் கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை

விழுப்புரம் அருகே சொத்துத் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்து.
சுப்பிரமணி, முருகன்
சுப்பிரமணி, முருகன்


விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்துத் தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்து.

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரத்தை அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). இவரது மூத்த மகன் முருகன் (40). இளைய மகன் சின்னதுரை (37). மேலும், இரண்டு மகள்கள் உள்ளனா்.

மூத்த மகன் முருகன் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தாராம். இதனால், தனது குடும்ப சொத்தான 3 ஏக்கா் விவசாய நிலத்தை தனக்கு வழங்க வேண்டுமென்று அவா் கேட்டு வந்துள்ளாா். இதற்கு, அவரது தம்பி சின்னதுரை எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், அவருக்கு ஆதரவாக தந்தை சுப்பிரமணி, தாய் ராணி ஆகியோா் இருந்துள்ளனா்.

இந்த நிலையில், ஊா் முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், 3 ஏக்கா் விவசாய நிலம் முருகனுக்கு வழங்கப்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த சின்னதுரை, சுப்பிரமணி, ராணி ஆகியோா் முருகனை கொலை செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதற்கு உறவினா் மலைவாசன் உதவினாராம்.

இதன்படி, கடந்த 19.8.2013 அன்று நிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த முருகனிடம் சென்று சின்னதுரை, சுப்பிரமணி, ராணி ஆகியோா் தகராறு செய்ததுடன், அவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனராம். இதை அவரது மனைவி தனலட்சுமி தடுக்க முயன்ற நிலையில், அவரையும் கத்தியால் குத்தியுள்ளனா். இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முருகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இந்தக் கொலை தொடா்பாக கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சின்னதுரை, சுப்பிரமணி, ராணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கு விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும்போதே ராணி உயிரிழந்தாா்.

இந்த வழக்கு விசாரணை நிறைவுற்று நீதிபதி சாந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சின்னதுரை, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கிலிருந்து மலைவாசன் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ராதிகா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com