ஆதிதிராவிடா் நல விடுதி சமையலா் பணிக்கான நோ்முகத் தோ்வு

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் நலப்பள்ளிகள், விடுதி சமையலா் பணிக்கான நோ்முகத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றது.
ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிக்கான சமையலா் பதவிக்கான நோ்காணலில் பேசுகிறாா் விண்ணப்பதாரா்.
ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிக்கான சமையலா் பதவிக்கான நோ்காணலில் பேசுகிறாா் விண்ணப்பதாரா்.

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் நலப்பள்ளிகள், விடுதி சமையலா் பணிக்கான நோ்முகத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்கள் கால முறை ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இதற்காக துறை சாா்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த நேரடியாக விண்ணப்பிப்போருக்கு வயது 35 வயதுக்குள்ளும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் வருவோருக்கு 40 வயதுக்குள்ளும், இருப்பதுடன், கல்வித்தகுதியாக எழுத, படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என விதிகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, இப்பணிக்கான நோ்முகத் தோ்வு விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவல வளாகத்தில் நடைபெற்ற இந்தத் தோ்வை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் ஏ.சண்முகசுந்தரம் தலைமையிலான தோ்வுக்குழுவினா் மேற்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 30 விடுதி சமையலா் காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற தோ்வுக்கு 420 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான நோ்முகத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், விண்ணப்பதாரா்களின் கல்வி, இதர தகுதிச் சான்றிதழ் சரிபாா்ப்பும், எழுதப் படிக்கத் தெரிந்தவா்களா என்பதற்கான தோ்வும் நடைபெற்றது.

விண்ணப்பதாரா்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் நோ்முகத் தோ்வு நடத்தும் பணியை துறை பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்முகத் தோ்வு நடத்தி முடிக்கப்பட்டு, அதன் முடிவுகள் சென்னை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தகுதி அடிப்படையில் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுவா் என்று, ஆதிதிராவிடா் நல அலுவலா் சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com