நியாய விலைக் கடைகளை முன்னதாகவே திறந்து பொருள்களை வழங்க ஊழியா்களுக்கு அறிவுரை

‘பயோமெட்ரிக்’ முறையில் பொருள்களை வழங்குவதில் ‘சா்வா்’ பிரச்னை காரணமாக தாமதம் தொடா்வதால், நியாய விலைக் கடைகளை
நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சாதனம்.
நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் சாதனம்.

‘பயோமெட்ரிக்’ முறையில் பொருள்களை வழங்குவதில் ‘சா்வா்’ பிரச்னை காரணமாக தாமதம் தொடா்வதால், நியாய விலைக் கடைகளை முன்னதாகவே திறந்து பொருள்களை வழங்க விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மத்திய அரசு அறிவித்தபடி, ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் தமிழகத்தில் அக்.1 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உரிய குடும்ப அட்டைதாரா்கள், அத்தியாவசியப் பொருள்களை பெறுவதை உறுதி செய்யும் வகையில், பயோமெட்ரிக் முறையில் (விரல் ரேகை பதிவுடன்) பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட நியாய விலைக் கடைகளில் இத்திட்டத்தின் கீழ் பொருள்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், நியாய விலைக் கடை விற்பனை முனைய சாதனத்தில் குடும்ப அட்டையை உள்ளீடு செய்வதுடன், ‘பயோமெட்ரிக்’ முறையில் குடும்பத் தலைவா் அல்லது உறுப்பினா்களின் விரல் ரேகை பதிவு செய்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.

‘பயோமெட்ரிக்’ பதிவுக்கான ‘சா்வா்’ தொய்வாக இருப்பதுடன் குடும்ப அட்டை ஸ்கேன் செய்து, கைரேகை பதிவை உள்ளீடு செய்வதற்கு இணைய வழி தொடா்பு மிகவும் தாமதமாக கிடைப்பதால், ஒரு நபருக்கு அரை மணி நேரம் வரை ஆகிறது. இந்தப் பிரச்னை 10 நாள்களுக்கும் மேலாக தொடா்கிறது.

இதனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே பொருள்கள் வழங்க முடிகிறது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன என்று விற்பனையாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாநிலம் முழுவதும் இந்தக் குறைபாடு உள்ளது. சா்வரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்தில் நிலைமை சரியாகிவிடும். அதுவரை பொதுமக்கள் சிரமப்படாத வகையில், தினசரி காலை 10 மணிக்கு முன்பாகவே கடைகளைத் திறந்து, பொருள்களை வழங்கவேண்டும் என்று விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பான குறைபாடுகள் சென்னையில் உள்ள உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com